தமிழகத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று மாநில துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு, இந்திய அளவில் 55 இடங்களில் எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 55 இடங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு சமீபத்தில் நடத்தியது. இதில் வேதாந்தா, 41 இடங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது.
இதில் காவேரிப் படுகையில் இருக்கும் இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனம் எண்ணெய் எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஓ.என்.ஜி.சி, கடலூரில் எரிவாயு எடுக்க அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழக அரசு இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஓ.பன்னீர் செல்வம், ‘தமிழகத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், ‘பாசிச பாஜக, மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகத்துக்கு எதிரான நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், கெயில் போன்ற திட்டங்களை அமல்படுத்துவதை நடவடிக்கையாக வைத்துள்ளது. காவேரிப் படுகையில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தினால், அந்த இடமே பாலைவனமாக மாறும்’ என்று திட்ட அனுமதிக்கு எதிராக கருத்து கூறியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக அளவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நெடுவாசல், கதிராமங்கலம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில், மக்கள் தன்னெழுச்சியாக வந்து இந்தத் திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)