This Article is From Jan 21, 2020

‘பெரியார் பற்றிய சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது’- ஆதாரத்துடன் வெளியே வந்த ரஜினிகாந்த்!!

Rajinikanth - “அவர்கள், அவர்களுடைய சான்றை வெளியிடுகிறார்கள். நான் என் தரப்பு சான்றுகளை வெளியிடுகிறேன்"

‘பெரியார் பற்றிய சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது’- ஆதாரத்துடன் வெளியே வந்த ரஜினிகாந்த்!!

Rajinikanth - "இது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம்"

Rajinikanth - துக்ளக் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை முன்வைத்தார். ரஜினி சொன்னது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை, அவர் வரலாற்றைத் திரித்து சொல்கிறார் என்றும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரஜினி.

சென்னையில் இருக்கும், தனது போயஸ் தோட்டம் இலத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர், “நீங்கள் ஒரு பத்திரிகையை நீட்டி, சொன்னது உண்மைதான் என்று சொன்னாலும், அன்று களத்தில் இருந்தவர்கள் நீங்கள் சொன்னது பொய் என்பதற்கு ஆதாரமாக பல சான்றுகளை வெளியிட்டுள்ளார்களே?” என்றார்.

அதற்கு ரஜினி, “அவர்கள், அவர்களுடைய சான்றை வெளியிடுகிறார்கள். நான் என் தரப்பு சான்றுகளை வெளியிடுகிறேன். இது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம்,” என்று பேசி முடித்து சரசரவென வீட்டுக்குள் சென்றுவிட்டார். 

முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணப் படங்கள் மற்றும் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. 

ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இந்த செயலால் அரண்டுபோனது. துக்ளக் இதழின் பிரதிகளை மாநில அரசு பறிமுதல் செய்தது. அப்படி இருந்தும் மீண்டும் இதழ்களை அச்சடித்து விநியோகம் செய்தார் சோ. அது மிக அதிகமாக விற்றது,” என்று சர்ச்சையாக பேசினார். 

இதனால் ரஜினிக்கு எதிராக திராவிட இயக்கங்கள் பொங்கி எழுந்துள்ளன. திராவிடர் கழகம், வெறுப்பைத் தூண்டும் வகையில் ரஜினி பேசியுள்ளதாகக் கூறி காவல் துறையில் புகார் அளித்துள்ளது. 

ரஜினி, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், “தர்பார்” திரைப்படம் ஓடும் திரையரங்குகளுக்கு வெளியில் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது திராவிடர் விடுதலைக் கழகம். 


 

.