This Article is From May 19, 2020

'நியூஸ் 7 தமிழ் விவாதங்களில் பங்கேற்க போவதில்லை' - திமுக, காங். கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி நியூஸ் 7 தமிழில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது.

'நியூஸ் 7 தமிழ் விவாதங்களில் பங்கேற்க போவதில்லை' - திமுக, காங். கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

ஜோதிமணி - கரு. நாகராஜன் மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பா.ஜ.க.வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அக்கட்சிகளின் சார்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி நியூஸ் 7 தமிழில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், காங்கிரஸ் தரப்பில் கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நாகராஜன், ஜோதிமணி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். 

விவாதத்தின் இறுதி பகுதியில் பேசிய நாகராஜன், “சகோதரி ஜோதிமணி, உண்மையிலேயே ஒரு எம்பி-யா இல்லை கேவலமான மகளிரா என்பது எனக்குத் தெரியவில்லை. பிரதமர் மோடியைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வெளியே சுற்றித் திரியும் காங்கிரஸ் நிர்வாகிகள் போலவா உள்ளார் பிரதமர்?” என்று சர்ச்சையாக பேசினார். 

இதற்கு குறுக்கிட்ட ஜோதிமணி, “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு சரியாக செயல்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினால், அதற்கு தரங்கெட்டத் தனமாக தனி மனித தாக்குதலில் ஈடுபடும் பாஜகவின் கரு.நாகராஜன் போன்ற மூன்றாம் தர நபர்களை விவாதங்களுக்கு அழைத்தால், என்னைப் போன்றவர்களை விவாதங்களுக்கு அழைக்காதீர்கள்,” என்று தனது கண்டனங்களைத் தெரிவித்து எழுந்து சென்றார்.

திமுக தரப்பில் பங்கேற்றிருந்த கலாநிதி வீராசாமியும், ஜோதிமணிக்கு ஆதரவு தெரிவித்து விவாதத்திலிருந்து பாதியிலேயே விலகினார். அவர் விலகும்போது, “இப்போது அமைதியாக இருந்துவிட்டால், கரு.நாகராஜன் சொல்வதை ஏற்றுக் கொள்வது போல ஆகிவிடும்,” என்றார். 

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிரபல தமிழ் செய்தி சேனலான நியூஸ் 7 தமிழின் விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அக்கட்சிகளின் சார்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -

தமிழக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் ஒப்புதலுடன் விடுக்கப்படும் கூட்டறிக்கை:

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் செல்வி எஸ்.ஜோதிமணி அவர்களை இழிவுபடுத்துகிற வகையில் பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் பேசியதை அநாகரீகத்தின் உச்சகட்டமாக கருதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். 

நீண்டகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வினர் மிக மிக கேவலமான முறையில் விவாதத்தில் பங்கேற்று வருவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

22m5it1

இத்தகைய போக்கின் தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையில் செல்வி ஜோதிமணி அவர்களை தரக்குறைவாக கரு.நாகராஜன் பேசுவதற்கு நெறியாளர் அனுமதித்தது மிகுந்த வேதனைக்குரியது. அந்த விவாதத்தை பார்த்தவர்கள் அனைவருமே பெரும்பாலான நேரம் கரு.நாகராஜனுக்கு ஏன் வழங்கப்பட்டது என்கிற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது. 

வரம்புமீறி நாகரிகமற்ற முறையில் பேசிய கரு.நாகராஜனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் இருந்து நெறியாளர் முற்றிலும் தவறிவிட்டார் என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறோம்.

தொலைக்காட்சி விவாதத்தில் மக்களவை உறுப்பினர் என்றோ, பெண் என்றோ பாராமல் செல்வி எஸ்.ஜோதிமணி அவர்களை தரம்தாழ்ந்து பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிற வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சி செயல்படாததை வன்மையாக கண்டிக்கிறோம். 

எனவே பா.ஜ.க.வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

.