ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
New Delhi: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை 30-ம்தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 5 நாட்கள் காவல் முடிந்துள்ள நிலையில், மேலும் 5 நாட்கள் சிபிஐ விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கடந்த புதன்கிழமையன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், விடுவிக்கப்படுவாரா இல்லையா என்பதை இன்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய இருந்தது.
இதற்காக சிதம்பரம் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதில், ஒன்று அமலாக்கத்துறை கைது செய்யப்படுவதிலிருந்து தன்னை பாதுகாக்கவும், மற்றொன்று சிபிஐ கைது செய்வதிலிருந்து பாதுகாக்கவும் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்தார்.
இதைத்தவிர மூன்றாவது மனுவாக, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை எதிர்த்தும், தன்னை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அளிக்கப்பட்ட அனுமதியை எதிர்த்தும் சிதம்பரம் இந்த புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார்.
எனினும், இந்த மூன்றாவது, மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இன்றைய விசாரணை பட்டியலில் அந்த வழக்கு குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. இது ப.சிதம்பரத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபிலிடம் நீதிமன்றம் கூறும்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி வழங்கிய பின்னர் அந்த வழக்கு விசாரணை பட்டியலில் இடம்பெறும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், கைதுக்கு முன் தொடரப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிபிஐ கைது செய்து விட்டதால் முன்ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது என்று கூறி உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், ஐஎன்எக்ஸ் வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்றம அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த 5 நாள் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ப.சிதம்பரத்தை மேலும் சில நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் 30-ம்தேதி வரை சிதம்பரத்தின் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.