This Article is From Jan 04, 2019

''ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவோம்'' - ராகுல் விடாப்பிடி

ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதில் பெரும் அளவு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தி வருகிறார்.

ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேட்டியளித்த காட்சி.

ஹைலைட்ஸ்

  • ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதில் அளித்துள்ளார்
  • நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி விட்டதாக மோடி மீது ராகுல் புகார்
  • அனில் அம்பானிக்கு கான்ட்ராக்ட் அளித்தது யார் என ராகுல் கேள்வி
New Delhi:

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ரஃபேல் போர் விமானங்களை ஒப்பந்தம் செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வர அச்சப்படுகிறார் என்று, ராகுல் காந்தி பேசி வந்தார். இந்த நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று ரஃபேல் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.

அவை முடிந்ததும் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
 

mn1haico

 

நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதில் அளிக்கவில்லை. விளக்கம் அளிக்காமல், விவாதத்தில் பங்கேற்காமல் பிரதமர் மோடி ஓட்டம் பிடித்து விட்டார். நிதியமைச்சர் அருண் ஜெட்லியே நீண்ட நேரமாக பேசி என்னை விமர்சித்துள்ளார்.

ஆனால் யாரும் எங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. பிரதமர் மோடி சார்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார் என்றால் அவர் எங்களது கேள்விகளுக்கு பதில் அளித்திருக்க வேண்டும்.

ஒரு போர் விமானத்தின் விலையை ரூ. 526 கோடியில் இருந்து ரூ. 1,600 கோடியாக உயர்த்தியது யார்? விமானப்படையா? பாதுகாப்பு அமைச்சகமா? அல்லது பிரதமரா?. விமானப்படைக்கு ரூ. 126 போர் விமானங்கள் தேவை. ஆனால் அதனை 36-ஆக யார் குறைத்தார்கள்?. அனில் அம்பானிக்கு எப்படி இந்த கான்ட்ராக்ட் கிடைத்தது?. அதனை முடிவு செய்தது யார்?.

சர்வதேச கடனாளியும், நெருங்கிய நண்பருமான அனில் அம்பானிக்கு கான்ட்ராக்ட் அளித்ததன் மூலம் தேசிய பாதுகாப்பு பலவீனம் அடைந்துள்ளது. இது தொடர்பாக மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

.