மையம்..! வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், திருவள்ளூரில் 22 செ.மீ, பூண்டியில் 21 செ.மீ, அரக்கோணத்தில் 17 செ.மீ, தாமரைப்பாக்கத்தில் 15 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு சில முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கனமழையை பொறுத்தவரையில், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது
இந்த மழை நிலவரமானது அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு தமிழக பகுதிகளில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும், வியாபாரிகளும் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும், முக்கிய சாலையில் ஏற்பட்ட தண்ணீர் தேக்கத்தினால், பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்தனர்.