தமிழகத்தில் கஜா புயலை அடுத்து, கொட்டித் தீர்த்த மழை அதன் பின்னர் சில நாட்களுக்கு ஓய்ந்திருந்தது. கடந்த இரண்டு நாட்களாக மாநிலத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும், அடுத்து வரும் நாட்களுக்கும் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில், ‘இன்றும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நேற்று எதிர்பார்த்ததை விட அதிக மழையே பெய்திருந்தது. ட்ரஃப் மூலம் நமக்கு குறைந்தளவு மழைதான் பெய்யும். காற்றழுத்த தாழ்வு நிலையில் பெய்வது போல மழை கொட்டித் தீர்க்காது. சென்னையின் சில இடங்களில் இன்று மழை பெய்யும். ஆனால், நகரத்தின் பல இடங்களில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருக்கும். ட்ரஃப் இப்படிப்பட்ட மழையைத் தான் கொண்டு வரும்.
நாளை முதல் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்யாது. இந்த பிரேக், 10 நாட்களுக்கு இருக்கும்.
தமிழக்கத்தின் பிற இடங்களைப் பொறுத்தவரை, மிதமான மழை இருக்கும். குன்னூர் பகுதியைச் சுற்றி மழை பெய்யலாம். அதேபோல திருச்சி, திருப்பூர், விருதுநகர் மற்றும் உள் தமிழகத்தின் சில இடங்களிலும் மழை பொழிய வாய்ப்பிருக்கிறது. தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள டெல்டா பகுதிளும் மழையை எதிர்பார்க்கலாம்.
டிசம்பர் 15 ஆம் தேதி முதல், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை மூலம் இதுவரை தமிழக அளவில் 320 மி.மீ மழை பொழிந்துள்ளது. டிசம்பர் 31-க்கு முன்னர் சராசரியான 438 மி.மீ மழை பெய்துவிட அதிக வாய்ப்புள்ளது.
சென்னையின் சராசரியோ 850 மி.மீ மழை. இதுவரை நகரத்தில் 360 மி.மீ மழைதான் பொழிந்துள்ளது. மீதமுள்ள காலக்கட்டத்தில் சராசரி அளவை எட்டுவது மிகச் சிரமமாகத்தான் இருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.