செவ்வாயன்று சவுதி அரேபியாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய இம்ரான் கான்.
RIYADH: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேசிய தேர்தலுக்கு பின்னர், இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் தொடரும் என நம்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான் கான் கூறும்போது, இந்தியாவுடன் அமைதி உடன்பாடு மேற்கொள்ள முயற்சி செய்தோம், எந்த பதிலும் வரவில்லை, ஆனால் இருதரப்பு உறவுகள் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும் என நம்புகிறோம் என்றார்.
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மற்ற நாடுகளை காட்டிலும் தற்போது பாகிஸ்தானுக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது அமைதி மற்றும் பாதுகாப்பு தான் என தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பரில், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. அதே மாதத்தில் நடந்த ஐ.நா. பொது சபைகளின் கூட்டங்களுக்கு இடையே இந்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும் அது நடைபெறவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த மாதம் சவுதி அரேபியாவுக்கு இரண்டாவது முறையாக சென்றுள்ளார். நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க, தற்காலிகமாக நிதி உதவி பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
நட்பு நாடுகளுக்கு கடனைத் திருப்பிச் செலுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களை எதிர்பார்த்து உள்ளதாக இம்ரான் கான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.