This Article is From Jan 25, 2019

“அத்வானி இந்த முறை போட்டியிடுவாரா..?”- பாஜக-வின் அதிர்ச்சி பதில்

கட்சியின் மிக முக்கிய மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் ஜோஷி ஆகியோருக்கு 2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு பொறுப்பு எதவும் வழங்கப்படவில்லை

“அத்வானி இந்த முறை போட்டியிடுவாரா..?”- பாஜக-வின் அதிர்ச்சி பதில்

91 வயதாகும் அத்வானியும், 84 வயதாகும் ஜோஷியும் தேர்தலில் போட்டி போடுவார்களா என்பது குறித்தும் இன்னும் அதிகாரபூர்வமாக கூறப்படவில்லை

ஹைலைட்ஸ்

  • பாஜக தலைமை, இது குறித்து முடிவெடுத்ததாக தெரியவில்லை
  • ஜோஷி, கட்சி சொல்வதை பின்பற்றுவார் எனத் தெரிகிறது
  • சீனியர்களுக்கு 2014 வெற்றிக்குப் பிறகு பொறுப்பு வழங்கவில்லை பாஜக
New Delhi:

வரும் மே மாதம் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக-வின் மூத்த நிர்வாகிகளான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் போட்டியிடுவார்களா என்பது குறித்து தேசிய அரசியலில் வட்டாரங்கள் பரபரக்கத் தொடங்கியுள்ளன. பாஜக மேலிடம், இந்த விவகாரம் குறித்து சீனியர்களையே முடிவெடுக்கச் சொல்லி கேட்டுள்ளதாக நமக்குத் தகவல் வந்துள்ளது. “75 வயதுக்கு மேல் இருக்கும் எவருக்கும் பொறுப்பு வழங்கப்படாது” என்பதையும் அவர்களிடம் பாஜக தரப்பு கூறியுள்ளதாக தெரிகிறது. 

கட்சியின் மிக முக்கிய மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் ஜோஷி ஆகியோருக்கு 2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு பொறுப்பு எதவும் வழங்கப்படவில்லை. அவர்கள் இருவரும் எம்.பி-க்களாக மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அத்வானி, குஜராத்தின் காந்திநகரிலிருந்து எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோஷி, தனது தொகுதியான வாரணாசியை மோடிக்காக விட்டுத்தந்து, கான்பூரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். 

இந்த முறை லோக்சபா தேர்தலுக்கு பாஜக தரப்பு, '75 வயதைத் தாண்டியவர்களுக்கு பொறுப்பு கிடையாது' என்ற கொள்கையுடன் களமிறங்குவதாக தெரிகிறது. அதே நேரத்தில் அமைச்சராவதற்குத்தான் அந்த வயது வரம்பு கடைபிடிக்கப்படுமே தவிர, போட்டியிடுவதற்கு அல்ல என்று தெரிவித்துள்ளது கட்சித் தரப்பு. 

கட்சியின் பிற சீனியர்களான சுஷ்மா சுவராஜ் மற்றும் உமா பாரதி ஆகியோர், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னரே அறிவித்து விட்டனர். இருவரும் தங்கள் உடல்நலக் குறைவே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் முடிவுக்கு கட்சித் தலைமை ஒப்புதல் கொடுத்ததாக தெரியவில்லை. 

91 வயதாகும் அத்வானியும், 84 வயதாகும் ஜோஷியும் தேர்தலில் போட்டி போடுவார்களா என்பது குறித்தும் இன்னும் அதிகாரபூர்வமாக கூறப்படவில்லை. ஜோஷிக்கு நெருக்கமான வட்டாரங்கள், ‘கட்சி என்ன சொல்கிறதோ, அதைத்தான் அவர் கேட்பார்' என்று தகவல் கூறியுள்ளன.

2014 தேர்தலுக்குப் பிறகு பாஜக, ‘மர்க்தர்ஷக் மண்டல்' என்ற அமைப்பை உருவாக்கியது. அதில் வாஜ்பாய், அத்வானி, ஜோஷி உள்ளிட்ட சீனியர்கள் சேர்க்கப்பட்டனர். கட்சிக்கு ஆலோசனை வழங்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒரு முறை கூட இந்த அமைப்பு சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்வானி, லோக்சபா சபாநாயகராக ஆக வேண்டும் விருப்பப்பட்டார். ஆனால், அந்தப் பதவியையும் சுமித்ரா மகாஜனுக்காக விட்டுக் கொடுத்தார். பாஜக-வில் மூத்தவர்களுக்கும் - இளையவர்களுக்குமான சண்டை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. கடைசியாக பிகார் தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை குறித்து அத்வானி, ஜோஷி உள்ளிட்ட சீனியர்கள் கடிதம் எழுதினார்கள். 


 

.