This Article is From Sep 24, 2018

“ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிப்போம்”- நிர்மலா சீதாராமன் உறுதி

ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்கியதில் பெரும் அளவு ஊழல் நடந்திருப்பதாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

“ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிப்போம்”- நிர்மலா சீதாராமன் உறுதி

குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு கவலை கொள்ளாது என்கிறார் நிர்மலா சீதாராமன்

New Delhi:

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இன்று இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், “ ரஃபேல் விவகாரத்தில் எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அனைத்தும் கற்பனையானவை. இதில் நடந்துள்ள உண்மை என்பது குறித்து நாட்டு மக்களுக்கு நாங்கள் விளக்கம் அளிப்போம். உண்மை வெளிச்சத்திற்கு வரும். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு பின்னணியில் சர்வதேச பின்புலம் உள்ளது என்றார்.

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தப்படி, போர் விமான கருவிகளை டசால்ட் நிறுவனம் உருவாக்கி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும். அதனை இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம் அசெம்பிள் செய்து போர் விமானத்தை உருவாக்கும்.

இந்த விவகாரத்தில், இந்தியாவில் போர் விமானத்தை அசெம்பிள் செய்வதற்கு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசியில் அந்த உரிமை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தலையீடு காரணமாகத்தான் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த வாய்ப்பை பெற்றதாகவும், இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதல் குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் பிரான்சின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலந்தே, மத்திய அரசுதான் ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்ததாக கூறினார். இதன்பின்னர், மத்திய பாஜக அரசு மீதான தாக்குதலை காங்கிரஸ் தீவிரப்படுத்தியது.

இந்த நிலையில்தான் ரஃபேல் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருக்கிறார்.

.