பதஞ்சலி முறையான மருத்துவ பரிசோதனைகளை நடத்தியுள்ளது: ராம்தேவ்
Mumbai: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6.25 லட்சத்தினை கடந்துக்கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 18 ஆயிரத்தினை கடந்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தினை கண்டறிய மருத்துவ உலகம் உத்வேகத்தோடு இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனில் என்கிற மருந்தினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த மருந்தானது கொரோனாவை குணப்படுத்தும் என்றும், பின்னர் குணப்படுத்துவதற்கான எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லையென்றும் நிறுவன தலைவர் பாபா ராம்தேவ் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
இப்படியான சூழலில், பதஞ்சலியின் கொரோனில் மருந்தானது, கொரோனா தொற்றினை குணப்படுத்தாது என்று மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே தற்போது தெரிவித்துள்ளார். மேலும், கொரோனில் தயாரிப்பாளரால் ஏதேனும் புகார்கள் கூறப்படுமாயின், மாநில உள்துறை துறையின் உதவியுடன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
“மக்களிடையே இந்த கொரோனில் மருந்து, கொரோனா தொற்றை குணப்படுத்தும் என்று கூறினாலோ, அல்லது மக்களை தவறாக வழிநடத்தினாலோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மருந்து ஒரு போதும் கொரோனாவை குணப்படுத்தாது.“ என அமைச்சர் கூறியுள்ளார்.
ஆயுஷ் அமைச்சகம் கொரோனில் என்கிற மருந்தினை விற்க அனுமதி அளித்துள்ளது. ஆனால், இந்த மருந்து நோய் எதிர்ப்பு திறனை மட்டுமே அதிகரிக்கும். ஆனால், மருந்தின் பெயர் குழப்பத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதை கவனிக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.