This Article is From May 24, 2019

வரும் தேர்தல்களிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா? ஜெயக்குமார் பதில்

தமிழக அரசு தொடர மக்கள் எங்களுக்கு கொடுத்த அங்கீகரமாக தான் பார்க்கிறோம்.

வரும் தேர்தல்களிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா? ஜெயக்குமார் பதில்

பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பதை கட்சியே முடிவுசெய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளன. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் கடும் தோல்வியை சந்தித்தது. 

தமிழகத்தில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் திமுகாவின் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியில் திமுகவின் சொந்த சின்னமான உதய சூரியன் சின்னத்தில் 23 தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம் திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, இந்தத் தேர்தலை பொறுத்தவரை தமிழக அரசு தொடர மக்கள் எங்களுக்கு கொடுத்த அங்கீகரமாக தான் பார்க்கிறோம். ஆர்.கே நகரில் மாயை ஏற்படுத்தி வளைத்தது போல தமிழகத்தையும் வளைத்துவிடலாம் என நினைத்தார் டிடிவி, அவரும் படுதோல்வி அடைந்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து கொண்டு வெளியே வருவது போல் திமுக-வினர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வராமல் இருந்தால் சரி. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி 2021க்குப் பிறகு மக்களை சந்தித்து மீண்டும் வெற்றிப் பெறுவோம் என்றார்.

இது தற்காலிக வெற்றி இனி வரும் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். இந்த முறை எதிர்கட்சியின் பிரசாரம் தவறுதலாக எடுபட்டுவிட்டது. தேர்தலுக்குப் பிறகு ஆட்சி நீடிக்காது, அப்படி நீடித்தால் ராஜினாமா செய்கிறேன் என துரைமுருகன் சவால் விடுத்தார் இப்போது அவர் ராஜினாமா செய்யத் தயாரா?

தொடர்ந்து அவரிடம், உள்ளாட்சி தேர்தல், வரும் தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கொள்கை முடிவு என்பதால் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பதை கட்சியே முடிவுசெய்யும் என்றார்.

.