காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் இன்று சபாநாயகரை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் பற்றி முழுமையாக விவாதிப்பதற்கு வசதியாகவும், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முறைப்படி கேட்டுப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான மனு ஒன்றையும் அவர்கள் சபாநாயகரிடம் அளித்துள்ளனர்.
மேலும், மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசை வலியுறுத்தவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்கவும் அவர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சட்டப்பேரவைத் தலைவர் தனபால், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால், சட்டமன்ற சிறப்புக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.