This Article is From Nov 28, 2018

இந்திய திரைப்பட வசூல் சாதனைகளை முறியடிக்குமா 2.0... சினிமா வட்டாரத்தின் பரபர தகவல்கள்!

வணிகப் படத்திற்கான அத்தனை பிரமாண்டமும் 2.0 வில் இருப்பதால் நிச்சயமாக இது வெகுஜன மக்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய திரைப்பட வசூல் சாதனைகளை முறியடிக்குமா 2.0... சினிமா வட்டாரத்தின் பரபர தகவல்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  படமான 2.0 நாளை வெளியாகவுள்ளது. இந்திய சினிமா உலகில் அதிகபட்ச செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் 2.0. 2010 ல் வெளியான எந்திரனின் இரண்டாம் பாகமாகவே இது எடுக்கப்பட்டுள்ளது. எந்திரனில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில், டாக்டர் வசீகரனாகவும், சிட்டி என்ற ரோபட்டாக நடித்திருப்பார். 

2.0 படத்தில் அக்ஸய் குமார் வில்லன் ரோலிலும் எமி ஜாக்ஸன் பெண் ரோபட்டாகவும் நடித்துள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே சாட்லைட் உரிமம் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம் 370 கோடி வசூலை அடைந்து விட்டதென பல தகவல்கள் கூறியுள்ளன. வர்த்தக ஆய்வாளர்கள் பலரும் 2.0 முதல் நாள் வசூலை 50 கோடியைத் தாண்டி எளிதாக கடந்து, அமீர்கான் நடித்து வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்கும் என்று கூறுகின்றனர்.

நாளை 2.0 வெளியாக உள்ள நிலையில் மற்ற படங்களின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 550 கோடி செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் மட்டுந்தான் இந்த வாரத்தில் வெளியாகவுள்ளது. பொதுவாக படம் வெளியீடும் போது படத்தயாரிப்பாளர்கள் விடுமுறை நாட்களான வாரக் கடைசியை குறி வைத்து வெளியிடுவது வழக்கம். மக்களின் விடுமுறை நாளில் வசூல் அதிகமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இவ்விதமான நடைமுறைதான் வழக்கமாக இருக்கும். ஆனால் 2.0 படம் இது போன்ற எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் நாளை வியாழன் அன்று வெளியாகவுள்ளது.

இந்திய மொழிகளான தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாகுவதால் இதற்கு முன் வெளியான படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் சாதனையை எளிதாக முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் குறித்தான கேள்விகளுக்கு என்.டி.டீ.வி தமிழ் சினிமாவிற்காக திரைத்துறை நிபுணர் ஶ்ரீதர் பிள்ளையிடம் கேட்டபோது, 5 மொழிகளில் படம் வெளியாகுவதால் நிச்சயமாக தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தானின் ஒரு நாள் வசூலை மிக எளிதாக முறியடிக்கும் என்றார். மேலும் சமூக வலைதளங்கள் வாழ்வின் அங்கமாகி விட்டதால் இதில் வரும் விமர்சனங்கள் நிச்சயமாக படத்தின் வெற்றியில் முக்கிய பங்கை வகிக்கும் என்றும் தெரிவித்தார். இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளதால் வாரத்தின் கடைசி நாள் வெளியீடு செய்வது சிரமம் என்று பதிலளித்தார்.

2.0 படம் வெளியீடு குறித்து இந்தி சினிமா வட்டாரங்கள் பலவும் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளன. திரைப்படத்தின் ட்ரெய்லர் பல வகையிலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் நிச்சயமாக முதல் நாளே 20 கோடியை எளிதாக வசூலிக்கும் என்று கூறுகின்றனர். வணிகப் படத்திற்கான அத்தனை பிரமாண்டமும் 2.0 வில் இருப்பதால் நிச்சயமாக இது வெகுஜன மக்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக கருதப்பட்டது. ஆனால் அப்படத்தின் திரைக்கதை வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. படத்தின் மீது மார்க்கெட்டிங் திறமையால் எப்படி ஒரு பிம்பத்தை கட்டமைத்தாலும் வெற்றியை எப்போதும் மக்களே உறுதி செய்கிறார்கள். 2.0 வெற்றியை பொறுத்திருந்து பார்ப்போம்
 

.