This Article is From Aug 27, 2020

தமிழகத்தில் அடுத்த மாதமும் தொடருமா இ-பாஸ் முறை? முதல்வர் எடப்பாடி சூசகம்!

மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது

தமிழகத்தில் அடுத்த மாதமும் தொடருமா இ-பாஸ் முறை? முதல்வர் எடப்பாடி சூசகம்!

தமிழகத்தில் அடுத்த மாதமும் தொடருமா இ-பாஸ் முறை? முதல்வர் எடப்பாடி சூசகம்!

இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனால், தமிழகத்தில் அடுத்த மாதமும் இ-பாஸ் முறை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளியூர், வெளி மாநிலங்கள் செல்லவும் இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதை மீறி இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டால் அது மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

எனினும், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து, பின்பற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆகஸ்ட் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  

இந்நிலையில், இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன.

முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டிற்கு புதிய தொழிற்சாலைகள் வந்துள்ளன. கடலூர் சிப்காட் நிறுவனங்கள் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

மேலும், விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் நடைமுறையால் தான் நோய் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை உடனடியாக கண்டறிய முடியும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவரிடம், அரியர் வைத்திருக்கும் கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அவர், மாணவர்கள் நலன் கருதி தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்று கூறினார். 

.