Heavy Rain Update - "கடலூர், டெல்டா பகுதிகள், தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"
Heavy Rain Update - தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதையொட்டி, மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. வானிலை மையம், இன்றும் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில், காலையிலிருந்து சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மழை இல்லை. இது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர், தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman) , பிரதீப் ஜான், விரிவாக விளக்கியுள்ளார்.
“மிக நல்ல மழையில் ஒரு இடைவெளி விழுந்துள்ளது. வறண்ட காற்று, மழை மேகங்களுக்கு பதிலாக வந்துள்ளதால், இன்று வானம் தெளிவாகவே இருக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும். இன்று காலையும் கனமழை நீடித்திருக்கும் என்று எண்ணப்பட்டது. ஆனால், அனைத்தும் இரவிலேயே முடிந்துவிட்டது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடலூர், டெல்டா பகுதிகள், தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். ஆனால், கவலையடையும்படி எதுவும் இருக்காது. நேற்றைய தினத்தில் எதிர்பாராத வகையில் கரூர் மற்றும் நாமக்கல்லில் நல்ல மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 180 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,” என்று தனது முகநூல் பக்கம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.