தமிழகத்தை உலுக்கிய கஜா புயலின் தாக்கம் நீங்கியுள்ள நிலையில், இன்று மாநில அளவில் மழை இருக்குமா என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
நேற்று நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ‘தமிழகப் பகுதிகளைக் கடந்து, காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த கஜா புயல், கேரளப் பகுதிகளைத் தாண்டி தற்பொழுது மீண்டும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், லட்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப் பெற்று, தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்லக் கூடும்.
தெற்கு அந்தமான் பகுதியில், வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தெற்கு வங்கக் கடல் பகுதியின் மத்தியப் பகுதிகளில் குறைந்த காற்றுழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.
இது வரும் 19, 20 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில், தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக வரும் 19, 20, 21 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரிநில் மழை பெய்யக் கூடும்' என்று தெரிவித்தார்.
இதனால் 19, 20 மற்றும் 21 தேதிகளில் கனமழை பொழிவை சமாளிக்க அரசு தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்றைய வானிலை குறித்து, ‘தமிழக அளவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பில்லை. அதே நேரத்தில் மாநிலத்தின் சில பகுதிகளிலும் புதுச்சேரியிலும் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் சில பகுதிகளில் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்' என்று தகவல் தெரிவித்துள்ளது வானிலை மையம்.