வைகோ, மாநிலங்களைவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், அவருக்கு எதிரான சில நாட்களுக்கு முன்னர், தீர்ப்பு வந்தது. 2009 ஆம் ஆண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. அதே நேரத்தில் நீதிமன்றம், ஒரு மாதத்துக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.
2009 ஆம் ஆண்டு, தான் எழுதிய ‘நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, “இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறுத்தப்படவில்லை என்றால், இந்தியா, ஒரே நாடாக இருக்காது” என்று பேசினார். இந்தப் பேச்சுக்கு எதிராகத்தான் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கைத் தொடர்நதது திமுக-வினர்தான். அப்போது மதிமுக - திமுக எதிரெதிர் முகாமில் இருந்தன. ஆனால் தற்போது மதிமுக சார்பில் வைகோ, திமுக-வின் ஆதரவுடன் ராஜ்யசபாவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்று சொல்லப்பட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு வந்ததைத் தொடந்து, வைகோ, மாநிலங்களைவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார்.
வைகோவின் வேட்பு மனு, தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, கூடுதல் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. வைகோவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால், அந்த இடத்தை இளங்கோ நிரப்புவார் என்று திமுக வட்டாரம் கூறுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் செய்தியாளர்களை சந்தித்து வைகோ, “சுதந்திர இந்தியாவில் தேசத் துரோக வழக்கில் இதுவரை யாருக்கும் தண்டனை வழங்கப்பட்டதில்லை. எனவே, எனுக்கு எதிராக தீர்ப்பு வரும் என்று கருதவில்லை. ஆனாலும், இந்த வழக்கின் அடிப்படையில் எனது மாநிலங்களவை வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, நானே ஸ்டாலினிடம், மாற்று ஏற்பாடாக இன்னொருவரையும் களத்தில் நிறுத்தங்கள் என்று சொன்னேன். தளபதி ஸ்டாலின், நான் ராஜ்யசபா எம்.பி-யாக வேண்டும் என்று விரும்பினார்.
இந்த நாட்டில் தேசப் பிதா மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை சுடுபவர்கள் எல்லாம், சுதந்திரமாகத் திரிகிறார்கள். ஆனால், நான் என்ன தேசத்துக்கு, இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என்று எனக்குத் தெரியவில்லை. ராஜ்யசபாவிற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பல தரப்பினர் விரும்பினர். அவர்கள் கவலை கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளேன்” என்றார்.