ராணுவத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கு இணையான பொறுப்பு வழங்க வேண்டும்
New Delhi: ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு, ஆண் அதிகாரிகளுக்கு இணையான கமாண்டர் பொறுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிரான அரசு தரப்பு வாதங்கள், பாரபட்சமானது என்றும் பழமைவாதம் என்றும் கூறிய நீதிமன்றம், இந்த தீர்ப்பை 3 மாதத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு அதிரடி காட்டியுள்ளது.
ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மேலும், உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில், கிராமப்புற பின்னணியில் இருந்தே பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சேர்கிறார்கள். தற்போதைய சமூக நடைமுறைக்கு ஏற்றறவாறு, பெண்களை தளபதிகளாக ஏற்றுக் கொள்ள மனதளவில் இன்னும் தயாராகவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது, ராணுவத்தில் குறுகிய சேவை ஆணையத்தில், 14 ஆண்டுகள் பணியாற்றிய பெண் கூட நிரந்திர ஆணையத்தின் விருப்பத்தை கொண்டிருக்க முடியும்.
14 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் உள்ளவர்களுக்கு நிரந்தர ஆணையம் வழங்கக்கூடாது என்பதற்கான எந்த காரணத்தையும் நாங்கள் காணவில்லை" என்று கூறிய நீதிமன்றம், 14 ஆண்டுகளுக்கும் குறைவான சேவையில் உள்ள பெண்களை மட்டுமே கருத்தில் கொள்ளும் அரசின் கொள்கையில் "அடிப்படைவாதம்" இருப்பதாக கருத்து தெரிவித்தார். எத்தனை ஆண்டுகளாக சேவை செய்தார்கள் என்பதை தவிர்த்து, மற்ற கொள்கைகள் அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் சமமாக பொருந்த வேண்டும்.
ராணுவத்தில் ஆண் அதிகாரிகளின் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு உயர் பதவி வழங்குவது போல, பெண் அதிகாரிகளுக்கும் தகுதிக்கு ஏற்றார் போல் உயர் பதவி வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.