கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து, வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தொடர்ந்து, 2018-19ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஜெ.தீபா, தீபக் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்கள் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசியம் ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, ஜெயலலிதா புகழை பரப்ப பலவழிகள் உள்ளன என்றும் அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதா புகழைத்தான் பாடுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், கோடநாட்டில் ஜெயலலிதா தங்கினார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து அனைத்துத் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஜூலை 22ம் தேதி ஒத்திவைத்தனர்.