Jagan Mohan Reddy - கடந்த மே, 30 ஆம் தேதி ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்றார் 46 வயதாகும் ஜெகன் மோகன் ரெட்டி.
ஹைலைட்ஸ்
- செலவுகளுக்குக் கடந்த மாதம் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது
- Chandrababu Naidu, ஆந்திர அரசின் இந்தச் செலவுகளை விமர்சித்துள்ளார்
- ஜெகன் செய்த பல செலவுகளுக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன
Hyderabad: ஆந்திர மாநிலம் குன்டூரில் (Guntur) உள்ள அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் (Jagan Mohan Reddy) வீட்டுக்குப் புதிய ஜன்னல் மற்றும் கதவுகள் போடப்பட உள்ளன. இதற்கு 73 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செலவுக்கான நிதிக்கு, ஆந்திர அரசு சென்ற மாதம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகனின் அரசியல் எதிரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu), இது குறித்துப் பேசுகையில், “ஒய்.எஸ்.ஆர் ஜெகன் அரசு, அவரது வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு சுமார் 73 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. அரசாங்க பணத்தில் இது செய்யபட்டுகிறது. கடந்த 5 மாத ஆட்சியில் நடத்தப்பட்ட நிர்வாக சீர்கேடுகளால் ஆந்திரா, நிதிச் சிக்கலில் தவிக்கும் நிலையில், இப்படி ஒரு செலவு…,” என்று கடுகடுத்துள்ளார்.
அதேபோல சந்திரபாபுவின் மகனான நர லோகேஷ், “1 ரூபாய் பணத்தை ஜெகன் சம்பளமாக பெறுகிறாராம்…” என்று கேலி செய்யும் விதத்தில் ட்வீட்டியுள்ளார்.
கடந்த மே மாதம் ஆந்திர சட்டம்ன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜெகன், தனது குன்டூர் தாடேப்பள்ளி கிராமத்தில் சுமார் 5 கோடி ரூபாய் செலவில் சாலை போட நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து குன்டூரில் உள்ள தனது வீட்டு மின்சாரப் பணிகளுக்காக 3.6 கோடி ரூபாய் செலவழித்தார். மேலும் ஒரு ஹெலிபேட் தளத்தையும் சுமார் 1.89 கோடி ரூபாயில் கட்டி முடித்தார்.
அதேபோல முதல்வர் வீட்டுக்கு அருகில், ‘பிரஜா தர்பார்' என்னும் பொது மக்கள் சந்திப்பதற்கான இடத்தையும் 82 லட்ச ரூபாயில் கட்டினார். ஆனால், கடந்த ஜூன் மாதம் சந்திரபாபு நாயுடு, முதல்வராக இருந்தபோது கட்டிய 8 கோடி ரூபாய் கான்ஃபெரன்ஸ் அறையை ‘சட்டவிரோதமாக' கட்டப்பட்டுள்ளது என்று சொல்லி இடித்தது ஜெகன் தலைமையிலான அரசு. இப்படி தொடர்ந்து பல்வேறு செலவினங்களை ஜெகன் ரெட்டி, செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அண்டை மாநிலமான தெலங்கானாவின் முதல்வரான கே.சந்திரசேகர் ராவ், கடந்த 2016 ஆம் ஆண்டு, 38 கோடி ரூபாய் செலவில் முதல்வர் இல்லத்தைக் கட்டியது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வராக இருந்தபோது, இதைப் போல பல செலவுகளைச் செய்துள்ளார்.
கடந்த மே, 30 ஆம் தேதி ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்றார் 46 வயதாகும் ஜெகன் மோகன் ரெட்டி. அப்போதிலிருந்து பல்வேறு திட்டங்களுக்காக அவர் புகழப்பட்டாலும், சில நடவடிக்கைகளால் அவர் விமர்னங்களுக்கும் உள்ளானார்.
உதாரணத்திற்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் இருந்த திட்டம் ஒன்றுக்குத் தனது தந்தையின் பெயரைச் சூட்டப் பார்த்தார் ஜெகன். அதேபோல ஒரு கிராம செயலக கட்டிடத்திற்கு தனது கட்சிக் கொடியின் வண்ணத்தைப் பூசியதற்கும் பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தார்.