This Article is From Nov 15, 2019

குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட்டி, 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

“திருப்பி அனுப்பி விட்டார்கள்” என்பதைக் கூடச் சொல்வதற்கு அஞ்சி - புதுப்புது வினோதமான சட்ட அர்த்தங்களைக் கூறி, “அரசியல் சட்டம் புரிந்த வல்லுனர்களையே” திணற வைத்தது அதிமுக அரசு.

Advertisement
தமிழ்நாடு Edited by

அரசு மருத்துவ கல்லூரியில் 48 பேர் மட்டுமே 'நீட்" பயிற்சி மையத்திற்குப் போகாமல் மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்கள்

தமிழகச் சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட்டி, 'தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு மூலமாகத் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்களில், தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களே அதிகம்” என்று தமிழக அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிறகும், “நீட் தேர்வினை, தற்போதைய அரசு ஏன் திரும்பப் பெறக் கூடாது" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பி, பத்து நாட்களுக்கு மேலான நிலையிலும், அதிமுக அரசோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ எந்தக் கருத்தும் சொல்லாமல், வழக்கம்போல மவுனம் காப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 8 மருத்துவக் கல்லூரிகளில் "நீட்" பயிற்சி மையத்தில் சேராமல் மருத்துவக் கல்வியில் சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட இல்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,200 மருத்துவ இடங்களில் 48 பேர் மட்டுமே 'நீட்" பயிற்சி மையத்திற்குப் போகாமல் மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்கள். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,650 சீட்டுகளில் 52 பேர் மட்டுமே "நீட்" பயிற்சி மையத்திற்குப் போகாமல் சேர்ந்துள்ளார்கள். இந்தத் தகவல்களை எல்லாம் அதிமுக அரசே உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளது.

“நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்” என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு - குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டும், அந்த மசோதாக்களை உதாசீனப்படுத்தி திருப்பி அனுப்பியது மத்திய பாஜக அரசு. “திருப்பி அனுப்பி விட்டார்கள்” என்பதைக் கூடச் சொல்வதற்கு அஞ்சி - புதுப்புது வினோதமான சட்ட அர்த்தங்களைக் கூறி, “அரசியல் சட்டம் புரிந்த வல்லுனர்களையே” திணற வைத்தது அதிமுக அரசு.

Advertisement

மத்திய பாஜக அரசின் சமூகநீதி விரோதப் போக்கிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனப்பூர்வமான ஒத்துழைப்பு நல்கி - தமிழக மாணவர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகம் போதும். இப்போது உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அதிமுக அரசு திருந்த வேண்டும்.

“மத்திய அரசிடம் காரணம் கேட்டிருக்கிறோம்” என்று கதைக்குதவாத வாதத்தை மீண்டும் முன் வைத்து தமிழக மக்களை ஏமாற்றாமல், சட்டமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடரினைக் கூட்டி, அதில், “தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி - ஒப்புதலைப் பெற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement

மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் கொடிய "நீட்" தேர்வு அடுத்து வருவதற்குள், இப்போதே அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழக இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும்; என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement