காஷ்மீர் மக்களின் நலன் கருதி சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதாக டாக்டர் நரேஷ் த்ரான் தெரிவித்துள்ளார்.
New Delhi: ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்யத் தயார் என்று மேதாந்தா மருத்துவமனை குழுமம் அறிவித்துள்ளது. காஷ்மீர் மக்களின் நலன் கருதி பிரதமர் மோடி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளார் என்று மருத்துவமனை குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-யை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை அதானி, அம்பானி உள்ளிட்ட தொழில் அதிபர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் மேதாந்தா மருத்துவமனை குழுமங்களின் தலைவர் டாக்டர் நரேஷ் த்ரான், காஷ்மிரில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஜம்மு காஷ்மீரில் இரண்டு மூன்று அரசு மருத்துவமனைகள்தான் உள்ளன. மற்றபடி தரமான மருத்துவமனைகள் என்று எதுவும் இல்லை. தற்போது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டிருப்பதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகளை வழங்க முடியும்.
அங்கு பிரச்னை ஓய்ந்த பின்னர் காஷ்மீரில் மருத்துவமனைகளை திறக்க நாங்கள் தயாராக உள்ளோம். சிறப்பு அந்தஸ்து இருந்திருந்தால் எங்களால் அங்கு மருத்துவமனைகளை அமைக்க முடியாது.
மருத்துவத்துறை என்பது அதிகம்பேருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் துறையாக உள்ளது. உதாரணத்திற்கு மருத்துவமனையில் ஒரு படுக்கை இருந்தால் அதன் மூலம் நேரடியாக 6 பேருக்கும் மறைமுகமாக 7 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். 2 ஆயிரம் படுக்கை கொண்ட மருத்துவமனையை அமைத்தால் சுமார் 34 ஆயிரம்பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின்னர் நேற்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, காஷ்மீரில் வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இளைஞர்கள் குறித்து பேசிய மோடி அவர்கள்தான் காஷ்மீர் வளர்ச்சிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.