ஹைலைட்ஸ்
- இந்த ஆண்டு டேராடூனில் யோகா செய்தார் பிரதமர் மோடி
- ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது
- கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
Dehradun:
உலக யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் டேராடூனில் சுமார் 50,000 தன்னார்வலர்களுடன் யோகா செய்தார்.
நேற்று மாலை டேராடூனுக்கு, யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோடி வந்தடைந்தார். இதையடுத்து இன்று காலை 6:30 மணி அளவில் டேராடூனில் இருக்கும் வன ஆய்வு மையத்திற்கு வெள்ளை உடை அணிந்து வந்தார் மோடி. பின்னர், அவருடன் சேர்ந்து ஏறக்குறைய 50,000 பேர் யோகா செய்தனர்.
இதையடுத்து மக்கள் மத்தியில் பேசிய மோடி, ‘யோகா தான் உலக மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக மாறியுள்ளது. நம் உடலளவிலும் மனதளவிலும் இருக்கும் வலியைப் போக்கும் வல்லமை யோகாவுக்கு இருக்கிறது. டேராடூன் முதல் டப்ளின் வரை, ஷாங்காய் முதல் சிகாகோ வரை, ஜகர்தா முதல் ஜோகன்னஸ்பர்க் வரை யோக பல லட்ச மக்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது’ என்று பெருமித்தத்தோடு பேசினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை யோகா செய்ய தீர்மானித்ததற்கு அம்மாநில முதல்வர் டி.எஸ்.ராவத், ‘பிரதமர் மோடி எங்கள் மாநிலத்தை யோகா செய்ய தேர்ந்தடுத்தமைக்கு மிக்க நன்றி. இந்த நிகழ்ச்சி மாநிலத்தின் சுற்றுலாத் துறை முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்’ என்று கருத்து கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, ஐ.நா ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அங்கீகரித்தது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளில் யோகாவின் மேண்மையைப் போற்றும் வகையில் பல்லாயிரம் பேர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று யோகா செய்து வருகின்றனர்.