Maharashtra: சிவசேனாவின் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வராக பொறுப்பேற்க உரிமை கோரியுள்ளார். அவரின் பதவியேற்பு விரைவில் நடைபெற உள்ளது.
Mumbai: தேசியவாத காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று, பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசில் 80 மணி நேரம் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் (Ajit Pawar), மீண்டும் என்சிபி பக்கமே சாய்ந்துள்ளார். மீண்டும், கம்-பேக் கொடுத்த அஜித் பவாரை, சரத் பவாரின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே (Supriya Sule), கட்டித் தழுவி வரவேற்றார்.
கம்-பேக் கொடுத்த அஜித், “நான் மீண்டும் வந்துவிட்டேன் என்று கேட்பதற்கு இடமே இல்லை. நான் எப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தேன். இப்போதும் என்சிபியில் தான் உள்ளேன்.
இந்த சமயத்தில் நான் எது குறித்தும் பேச விரும்பவில்லை. சரியான நேரத்தில் நான் பேசுவேன். இப்போது தேவையில்லாத குழப்பம் கிளப்ப வேண்டியதில்லை,” என்று சூசகமாக பதில் கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிகோர இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அஜித் பவார், பாஜக-வுடன் கூட்டணி வைத்தார். சனிக்கிழமை காலை பாஜக-வின் தேவேந்திர ஃபன்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார், துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதை எதிர்த்த தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார், “எங்கள் கட்சியின் முடிவு அல்ல இது. அஜித் பவாரின் முடிவு. இதற்கு நாங்கள் ஒத்துழைப்புக் கொடுக்க மாட்டோம்,” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதே நேரத்தில் அஜித் பவாரை பொது இடத்தில் சாடவில்லை பவார். கட்சி ரீதியாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நேரத்தில்தான் துணை முதல்வராக அஜித் பொறுப்பேற்று இருந்தாலும், அவரை மீண்டும் என்சிபி-க்கு அழைத்து வரும் வேலைகளை ஒரு பக்கம் பார்க்க ஆரம்பித்தார் சரத் பவார். அவரின் தொடர் முயற்சிகளாலேயே அஜித், மீண்டும் என்சிபிக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் சொல்கின்றன.
இப்படிப்பட்ட நேரத்தில்தான் நேற்று, மகாராஷ்டிர அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இன்று மாலைக்குள் பெரும்பான்மையை ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். இதைத் தொடர்ந்து அஜித், ஃபட்னாவிஸிடம் எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் ஈர்க்க இன்னும் காலக்கெடு வேண்டும் என்று கூறி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து ஃபட்னாவிஸும் பதவியைத் துறந்தார்.
இந்நிலையில், சிவசேனாவின் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வராக பொறுப்பேற்க உரிமை கோரியுள்ளார். அவரின் பதவியேற்பு விரைவில் நடைபெற உள்ளது.