This Article is From Jul 06, 2018

சீனாவின் மீதான புதிய வரிவிதிப்பின் மூலம், வர்த்தக போரை தொடங்கியுள்ளார் டிரம்ப்

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனா மீது அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிவிதிப்பு வெள்ளியன்று அமலுக்கு வருகிறது

சீனாவின் மீதான புதிய வரிவிதிப்பின் மூலம், வர்த்தக போரை தொடங்கியுள்ளார் டிரம்ப்
Washington:

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனா மீது அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிவிதிப்பு வெள்ளியன்று அமலுக்கு வருகிறது. இரு நாடுகளின் இந்த வர்த்தகப் போர், உலக சந்தையின் பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட $34 பில்லியன் மதிப்புள்ள சீன இயந்திரங்கள், மின்னணுவியல் மற்றும் உயர் தொழில்நுட்ப உபகரணங்கள், கணினி ஹார்ட் டிரைவ் மற்றும் எல்.ஈ.டி.க்கள் உள்ளிட்ட பொருட்களின் மீது ட்ரம்ப் 25% கூடுதல் வரிகளை சுமத்தியதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களின் மீது தன்னுடைய சொந்த வரிகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச வர்த்தகத்தை அச்சுறுத்தும் இந்த வரிவிதிப்புகள் உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் எதிரொலியாக வந்துள்ளது. மேலும் பல்வேறு தொழில்துறைத் தலைவர்களும் சந்தையின் சுருக்கம், விலை ஏற்றம் மற்றும் மெதுவான வளர்ச்சி போன்ற காரணங்கள் பற்றி கவலை தெரிவித்து வருகின்ற சூழலும் இருக்கிறது.

அமெரிக்காவின் தொழில்நுட்ப யுத்திகளை அரசாங்க நிதியுதவியுடன், சைபர் தாக்குதல் மூலம் திருடி சீனா தன்னுடைய வளர்ச்சியை கட்டமைப்பதாக அமெரிக்கா தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வலிமை மற்றும் அதிகரித்து வரும் சரக்கு வர்த்தக பற்றாக்குறைகள் மூலம் இந்த பழிக்குப் பழி சண்டையில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்க, சீனாவை வெல்லும் என்று நம்பப்படுகிறது.

சீனாவுடனான அமெரிக்காவின் சரக்கு வர்த்தக பற்றாக்குறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு $ 375.2 பில்லியன் என்கிற அளவில் பதிவாகியுள்ளது. இது டிரம்ப்பின் சினத்தை மேலும் தூண்டிவிட காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் சீனா தர இருக்கும் எந்தவொரு பதிலடிக்கும் டிரம்ப் எவ்வாறு எதிர்வினை ஆற்றப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆனால், வியாழனன்று டிரம்ப் எந்த விதமான பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை என்பதை திட்டவட்டமாக மறுத்து, வெள்ளிக்கிழமை வரிவிதிப்பு அமலுக்கு வந்ததன் அடுத்த கட்டமாக மேலும் சீன இறக்குமதிகளுக்கு வரிவிதிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விளைவுகளை உணரும் தொழில் துறையினர்.

அமெரிக்க மத்திய வங்கி வியாழனன்று , 2008 வீழ்சசிக்கு பிறகு 10வது ஆண்டாக வளர்ந்து வரும் அமெரிக்காவின் பொருளாதாரம் இந்த வர்த்தக போரினால் பாதிப்படையும் என எச்சரித்துள்ளது.

ஃபெடரல் ஆய்வு அறிக்கையின் படி, அமெரிக்கா முழுவதும் உள்ள தொழில் துறையினர் மத்திய வங்கியிடம் தங்களுடைய செலவின திட்டங்களை குறைத்தும், சிலவற்றை தள்ளியும் வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வர்த்தகப் போரில் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்

ஒரு தொழில் துறை ஆய்வு, டிரம்ப்பின் இந்த தீவிரமான பலமுனை தாக்குதல்களின் மூலமாக பல்வேறு நிறுவனங்கள் சிக்கலில் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது.

இன்ஸ்டிட்யூட் ஆஃப் சப்ளை மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் அந்தோணி நேவீஸ் வியாழனன்று கூறுகையில், "பணவீக்கத்துக்கான அறிகுறிகளை எங்களால் உறுதியாக பார்க்கமுடிகிறது, என்றார்.

இந்த வர்த்தக போரின் தொடக்கம் டிரம்ப் மற்றும் அவரின் சொந்த ரிபப்ளிக் கட்சியினருக்கும் இடையே விரிசலை உருவாக்கியுள்ளது. அந்த கட்சியில் உள்ள இலவச வர்த்தகம் மற்றும் பெருவணிகத்தை விரும்பும் பலரும் வெள்ளை மாளிகையின் இந்த வர்த்தக போட்டியிலிருந்து விலகியிருகின்றனர்

ஆனால், நவம்பர் மாதம் வரவிருக்கும் இடைக்கால தேர்தலுக்கு மத்தியில் கடுமையான அரசியல் சிக்கல்களை சந்தித்து வரும் டிரம்ப் மற்றும் அவரது கட்சியினரை சீனாவின் இத்தகைய பதில் நடவடிக்கைகள் கலக்கம் அடையச்செய்திருக்கிறது. வாக்காளர் மத்தியில் எதிர்கட்சியினருக்கு ஆதரவான சூழலை இது உருவாக்கியிருக்கிறது.

அமெரிக்க சாம்பர் ஆஃப் காமர்ஸ், இந்த வாரம் கூறுகையில், "டிரம்ப்பின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக சீனா, கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளின் பதிலடிகள் ஏற்கனவே அமெரிக்க ஏற்றுமதியில் $75 பில்லியன் டாலர் அளவுக்கு பாதித்துள்ளது" என்றுள்ளது.

.