கணைய பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Panaji: உடல்நல பாதிப்பால் கோவா முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. இதுகுறித்து பதிலளித்துள்ள பாஜக, கோவாவில் தங்களது கூட்டணி வலுவாக உள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளது.
மொத்தம் 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் 14 பேரை மட்டுமே வைத்திருக்கும் பாஜக, மாநில கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. பாஜக அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பில் பாரிக்கர் இல்லாததால் கோவா நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. எனவே பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இந்நிலையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கவர்னரை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லிகர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “ கோவாவில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை. அப்படி செய்தால், மாநில கூட்டணி கட்சிக்குள் பிரச்னை ஏற்படும். மேலும், பாரிக்கர் உடல்நிலையை அரசியலாக்குவதாக கருதப்பட்டு விடும். ஆட்சியமைக்க எங்களுக்கு போதிய பலம் உள்ளது. சட்டசபையில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்“ என்றார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவர்னரை இன்னும் சந்திக்கவில்லை.
முன்னதாக பாஜக மத்திய குழு கோவா எம்எல்ஏக்களை சந்தித்து பேசியது. இதன்பின்னர் பேட்டியளித்த கட்சியின் மூத்த தலைவர் ராம் லால் கூட்டணி கட்சியினர் தங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.
பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறத் தவறிய பாஜக, கோவா முன்னணி, மகாராஷ்டிரவதி கோமந்தக் கட்சி மற்றும் 3 சுயேச்சைகளின் ஆதரவுடன் அரசை அமைத்துள்ளது.
62 வயதாகும் மனோகர் பாரிக்கருக்கு கணைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் 3 மாதங்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சனியன்று பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.