உச்ச நீதிமன்றம் சமீபத்தில், சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்லக் கூடாது என்றிருந்த தடையை விலக்கியது
Sabarimala: சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயில் இந்த மாதம் 5 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, சென்ற முறை ஏற்பட்ட பதற்றத்தைத் தடுக்க கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் சமீபத்தில், சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்லக் கூடாது என்றிருந்த தடையை விலக்கியது. அனைத்து வயதுப் பெண்களும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 17 ஆம் தேதி ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது.
அன்று முதல் கோயில் நடை மூடப்பட்ட அக்டோபர் 22 ஆம் தேதி வரை, பல பெண்கள் மற்றும் செயற்பாட்டளர்கள் ஆலயத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால், சபரிமலையில் குவிந்திருந்த வலதுசாரி போராட்டக்காரர்களால் அவர்கள் தொடர்ந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் சென்ற முறை நடை திறக்கப்பட்ட போது ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் வரும் 5 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து சபரிமலை இருக்கும் பட்டணம்திட்டா மாவட்ட நிர்வாகம், 144 தடை உத்தரவைப் பிறப்பிக்க உள்ளது. எலவாங்குல், நிலக்கல், பம்பா, சன்னிதானம் ஆகிய பகுதிகளுக்கு சனிக் கிழமை
இரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், அந்த உத்தரவு செவ்வாய் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்தும் சென்ற முறை ஏற்பட்ட வன்முறை குறித்தும் பேசியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை, கேரள அரசு தொடர்ந்து பின்பற்றும். சபரிமலையில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் சங்பரிவார அமைப்புகள் தான். கேரளாவின் காலூன்ற வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் அனைத்து வித முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.