This Article is From Feb 15, 2019

ஓரிரு நாளில் கூட்டணி குறித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக சார்பில் தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

ஓரிரு நாளில் கூட்டணி குறித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பரப்பரப்பாக கூட்டணி அமைப்பதில் மும்முரம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என்ற செய்தி வெளியாகி வருகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜக கூட்டணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தக் கூட்டணியில் தமிழகம் வந்து இருக்கும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்பு முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்ய நேற்றிரவு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தார். அங்கு தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்கு இரவு அவர் சென்ற நிலையில், 10 மணி அளவில், தமிழக அமைச்சர் தங்கமணியும் அங்கு வந்தார். இதையடுத்து இருவரும் சுமார் 3 மணி நேரம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோரும் உடன் இருந்தனர். நள்ளிரவில் நீடித்த இந்த பேச்சுவார்த்தை, அதிகாலை 1 மணி அளவில் நிறைவடைந்தது.

முன்னதாக, நேற்று மாலை சென்னை வந்ததும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல், தமிழக மக்களின் வளர்ச்சி மீது, பிரதமர் மோடி மிகுந்த அன்பும், அக்கறையும் வைத்திருப்பதாக கூறினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன்னை தம்பியாக வரவேற்றார் எனவும், கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக சார்பில் தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய விரைவில் நேர்காணல் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

.