அரசியல் லாபத்துக்காக மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தினேஷ்குமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையில் மெரினா சாலையில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதையடுத்து, எம்.ஜி.ஆர் நினைவு வளைவு திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் எம்ஜிஆரை பெருமைப்படுத்தவே நினைவு வளைவு அமைத்துள்ளோம் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணையில், எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு கட்டியதை தவிர வேறென்ன செய்தீர்கள்? ஆண்டு முழுவதும் நூற்றாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பேனர் வைத்தீர்கள். அவரின் கொள்கை, கருத்துகளை பரப்ப என்ன செய்தீர்கள்? அந்த நினைவு வளைவை பார்த்தால் எம்.ஜி.ஆர் பற்றிய நல்ல நினைவுகள் வருமென அரசு நினைப்பதில் என்ன தவறிருக்கிறது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், சிவாஜி நினைவாக மணிமண்டபம் கட்டினார்கள். அதில் யார்? என்ன? பலனடைகிறார்கள்?? அதுகூட நீர்நீலை இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அத்துடன் விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை திறக்கலாம் என அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.