This Article is From Apr 07, 2020

''ஒருவரால் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும்'' - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

''ஒருவரால் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும்'' - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • கொரோனா பரவல் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது
  • கொரோனா பாதித்த ஒருவரால் அதனை 406 பேருக்கு பரப்ப முடியும்
  • ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன
New Delhi:

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளன.

மாநிலங்களின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் முடிவுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி லா அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கொரோனா வைரஸ் அறிகுறிகள் லேசாகவோ அல்லது மிக லேசாகவோ இருப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தேவையில்லை. கொரோனா பரவல் குறித்து இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றித் திரிந்தால் 30 நாட்களில் 406 பேருக்கு வைரஸை பரப்ப முடியும் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் 704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் எண்ணிக்கை இன்று 508 ஆக குறைந்துள்ளது. 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அதிகம் பாதிக்கப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 லிருந்து 690-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

.