Hyderabad: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில், சாலை வசதி இல்லாத கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பிரசவித்துள்ளார். மாசிக வலசா சிந்தாலா சாலூர் என்ற பழங்குடி கிராமத்தைச் சேர்த முத்தம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அந்த கிராமத்துக்கு முறையான சாலை ஏதும் இல்லை என்பதால், மூங்கில் கட்டையில் துணி வைத்து தூளி கட்டி அதில் முத்தம்மாவை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.
கரடுமுரடான காட்டுப் பாதையில், மிகவும் சிரமப்பட்டு முத்தம்மாவை கிராம ஆண்களும் பெண்களும் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே, வலி அதிகரிக்க, காட்டின் நடுவழியே நிறுத்தப்பட்டு அங்கேயே பிரசவம் பார்க்கப்பட்டது.
இது அத்தனையையும் இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த கிராம மக்கள் பல முறை அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடம் மனு கொடுத்தும் சாலை வசதி செய்து தரப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் இப்படித்தான் ஆபத்தான முறையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதாக இருக்கிறது என்று மிகுந்த விரக்தியுடன், கிராம மக்கள் தெரிவித்தனர்.
முத்தம்மாவுக்கு பிரசவம் நடந்ததும், தொப்புள் கொடியை பிளேடால் அறுக்கும் காட்சி, பதபதைக்க வைக்கிறது. விஜயநகர மாவட்ட பழங்குடி கிராமங்களில் இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. ஜூன் மாதம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் 12 கி.மீ மலைப்பாதையில், சாலை இருக்கும் பகுதிக்கு தூக்கிச் செல்லப்பட்டார். சாலைக்கு சென்றால் தான் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்ல முடியும். ஆனால், போகும் வழியிலேயே பிரசவித்தார். அந்த குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்தது.
சூரியனுக்கே செயற்கைக்கோள் அனுப்பபடும் இந்தக் காலத்தில், பழங்குடி மக்களுக்கு இன்னும் முறையான சாலை வசதியே இல்லாதது, மிகப் பெரிய சமுதாய முரணாக இருக்கிறது.