சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி
ஹைலைட்ஸ்
- நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் நடந்தது
- தனபால், இது குறித்து பின்னர் விளக்கம் அளித்தார்
- அவை பெண் காவலர்களை வைத்து விஜயதாரணி வெளியேற்றப்பட்டார்
Chennai: தமிழக சபாநாயாகருடன் கருத்து மோதலில் ஈடுபட்ட காரணத்திற்காக சட்டப்பேரவையிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.
நேற்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, தனது சொந்த ஊரான கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு பிரச்னை குறித்து பேச எழுந்தார். ஆனால், 'காலை 9:40 மணிக்கு தான் இந்தப் பிரச்னை குறித்து பேச எனக்கு நோட்டீஸ் கொடுத்தீர்கள். எனவே, இப்போது பேச நேரமில்லை. நீங்கள் அமருங்கள்' என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதைப் பொறுட்படுத்தாமல் விஜயதாரணி தொடர்ந்து பேசினார். இதற்கு, 'நீங்கள் இருக்கையில் அமருங்கள்' என்று இன்னொரு முறை எச்சரித்தார் தனபால். இதையடுத்து எம்.எல்.ஏ, 'நான் தொடர்ந்து பேசுவேன், என் மீது நடவடிக்கை எடுத்துப் பாருங்கள்' என்று கோபமடைந்தார்.
பின்னர், அவைக் காவலர்களை வரவழைத்து விஜயதாரணியை வெளியேற்றினார் சபாநாயகர். இது குறித்து காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராமசாமி சபாநாயகரிடம் முறையிட்டார். இதற்கு தனபால், 'பிர்ச்னையை திசைத் திருப்பப் பார்க்காதீர்கள்' என்று சொன்னார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த விஷயம் குறித்து பேசிய தனபால், 'என்னை அவர் மிரட்டும் தொனியில் பேசினார். மேலும், தன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பேசினார். அதன் பிறகும் நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த சபாநாயகர் பதவி எதற்கு? அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதைப் பார்த்தோம். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுவரை ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை வெளியேற்ற உத்தரவிட்டதில்லை. ஆனால், விஜயதாரணி விஷயத்தில் எனக்கு வேறு வழி தெரியவில்லை' என்று விளக்கம் அளித்தார்.