Coimbatore, Tamil Nadu: கொள்ளை சம்பவத்தின் போது அந்நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லை.
Coimbatore, Tamil Nadu: கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், அந்நிறுவனத்தின் பெண் ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று நடந்த நிதி நிறுவன கொள்ளை சம்பவத்தில், அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர் ரேணுகா தேவி மற்றும் கெம்பட்டி காலனியை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.1.34 லட்சம் பணத்தையும் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமையன்று முகத்தை துணியால் மூடியப்படி வந்த மர்ம நபர், அங்கு பணியில் இருந்த 2 பெண்களை தாக்கி, அவர்கள் மீது மயக்க மருந்து தெளித்து மயக்கமடைய செய்துவிட்டு, அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த பெண் ஊழியர்கள் எழுந்து பார்த்தபோது, நிறுவனத்தின் லாக்கர்கள் திறந்த கிடந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். எனினும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த கொள்ளை சம்பவத்தின் போது நிதி நிறுவனத்தில் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிகளும் இல்லை என போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் கொள்ளை சம்பவத்தின் போது, எந்த வன்முறைகளும் நிகழவில்லை என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். அதில் ரேணுகா தேவி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே அவரது செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
அதில், அவரது எண்ணுக்கு அடிக்கடி வந்த சில அழைப்புகள் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கெம்பட்டி காலனியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் திட்டம்திட்டியே இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.