This Article is From Feb 13, 2019

‘சாதி, மதம் அற்றவர்’ என சான்றிதழ் வாங்கிய முதல் பெண்! #Exclusive

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா

‘சாதி, மதம் அற்றவர்’ என சான்றிதழ் வாங்கிய முதல் பெண்! #Exclusive

‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என்ற அரசு சான்றிதழை வாங்கியுள்ளார் சினேகா

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா. அவர், ‘சாதி மற்றும் மதம் அற்றவர்' என்ற அரசு சான்றிதழை வாங்கியுள்ளார். 

இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள சினேகாவை தொடர்பு கொண்டோம். அவர் ஒரு அறிக்கை வடிவிலான தனது கருத்தை எங்களுக்கு அனுப்பினார். அதில், ‘ஆனந்தகிருஷ்ணன்- மணிமொழி தம்பதியரின் மூத்த மகள் நான். காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாக சிநேகா என பெயரிட்டனர். அம்மாவின் முதல் எழுத்தை முதலிலும், அடுத்தது அப்பாவின் முதல் எழுத்து என ம.ஆ.சிநேகா ஆனேன்.

முதல் வகுப்பு சேர்க்கையில் தான் பள்ளி நிர்வாகம்  முதலில் நான் என்ன சாதி என்று கேட்டது. எனக்கு சாதி இல்லை என்று என் பெற்றோர் சொல்ல, மதத்தையாவது சொல்லுங்கள் என்றனர். மதமும் இல்லை என்றனர் என் பெற்றோர்.

 

avm49ofo

இப்படி தான் தொடங்கியது என் முதல் பிரச்சாரம். பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி மதம் குறிப்பிட்டதில்லை. சாதி சான்றிதழும் இல்லை. என் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர் அவ்வண்ணமே வளர்த்தனர்.

என் இணையர் கி.பார்த்திபராஜா உடனான என் இணை ஏற்பு விழா சாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற சாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடத்தினோம். ஆதிரை நஸ்ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என பெயரிட்டு எங்கள் மகள்களை சாதி மத அடையாளங்கள் இன்றி வளர்கிறோம். சாதி சான்றிதழை எல்லா இடங்களிலும் கேட்கும் இந்த அமைப்பிற்கு நாங்கள் அந்நியர்கள் ஆனோம். 

சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி மதம் அற்றவர் என்ற எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தேன். நீண்ட முயற்சியில் என்ன சாதி என்று சொல்லவே எங்களுக்கு உரிமை உண்டு, சாதி இல்லை மதம் இல்லை என சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை என பல முறை மறுப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டேன். எனினும் இறுதியில் வெற்றி பெற்றோம். சாதி இல்லை மதம் இல்லை என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்று வெற்றி பெற்றேன்.

சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும். இதோ இவர்களின் சாதி மத வர்க்கம் அற்ற சமூகத்தற்கான கனவின் முதல் புள்ளி. லட்சியங்கள் வெறும் கனவுகளல்ல. போராடினால் சமூக மாற்றம் சட்டங்களாகும். சாதி மதம் அற்றவரென அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். கொள்கை காற்றில் கரையும் வெற்று முழக்கமல்ல. சமூக புரட்சிக்கான வலுவான விதை' என்று குறிப்பிட்டுள்ளார். 

.