This Article is From Dec 05, 2019

பாலியல் வன்கொடுமை புகார்: நீதிமன்றம் செல்லும் வழியில் பெண் மீது தீ வைப்பு!

Unnao Rape Survivor Set On Fire: அந்த பெண் 60 முதல் 70 சதவீதம் தீக்காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் இரண்டு ஆண்களுக்கு எதிராக புகார் அளித்தார்.

ஹைலைட்ஸ்

  • உயிருக்கு போராடும் நிலையில் அந்த பெண் மருத்துவனையில் அனுமதி
  • இரண்டு ஆண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
  • குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Lucknow:

பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்த இளம்பெண் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் செல்லும் வழியில் அவரை 5 பேர் தீ வைத்து எரித்துக்கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், தனது கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு ஆண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

எனினும், சில நாட்களில் அவர் ஜாமின் வாங்கி வெளியே வந்தார். மற்றொரு குற்றவாளியை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. எனினும், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவத்துள்ளனர். 

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அந்த பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளது. இதில், அந்த பெண் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதில், அந்த பெண் 60 முதல் 70 சதவீதம் தீக்காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக உன்னாவோ மாவட்டத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை எங்களுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அந்த பெண் குற்றவாளிகளின் பெயரை தெரிவித்துள்ளார். அவர்களை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

.