கடந்த 2 வருடங்களாக மென்பொருள் நிறுவனத்தில் அந்த பெண் பணிபுரிந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hyderabad: பணிநீக்க பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதால், தெலுங்கானாவில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்த இளம்பெண் ஹரிணி (24). கடந்த 2 வருடங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்காக, ராய்துர்காம் பகுதியில் விடுதியில் தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், அண்மையில் தனது நிறுவனத்தில் வெளியிட்டப்பட்ட பணிநீக்க பட்டியலில், ஹரிணியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடும் மன உளைச்சலில் இருந்த ஹரிணி தனது சகோதரரிடம் இது தொடர்பாக விவாதித்துள்ளார்.
எனினும், மன உளைச்சலில் இருந்து மீண்டு வரமுடியாத ஹரிணி, தனது வாழ்க்கையை முடித்து கொள்ள நினைத்து தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து, ராய்துர்காம் காவல் ஆய்வாளர் கூறும்போது, தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது, அந்த பெண் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், தனது உறுப்புகளை தானம் செய்யும்படி ஹரிணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அந்த பெண்ணின் சடலம் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.