மதுரையில் ரயிலில் இருந்து இறங்கியபோது, ரயில் பெட்டிக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட பெண் பயணி ஒருவர், கடுமையான போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலில் மதுரையை சேர்ந்த பூர்ணிமாவும் அவரது இரண்டு குழந்தைகளும் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போதும் பூர்ணிமா இறங்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர், ரயில் புறப்படும் நேரத்தில் சுதாகரித்துக் கொண்ட அவர் உடனடியாக இறங்க முற்பட்டுள்ளார்.
இதில் தூக்க கலக்கத்தில் இருந்த அவர், திடீரென ரயில் பெட்டிக்கும் - நடைமேடைக்கும் இடையே சிக்கினார். இதனால், அதிர்சியடைந்த பயணிகள் ரயில் செயினை பிடித்து இழுத்தனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். இதையடுத்து, ரயில் பெட்டிக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிய அந்த பெண்ணை ரயில்வே போலீசார் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, கடுமையான போராட்டத்திற்கு பின்னர், பிளாட்பாரத்தை உடைத்து பூர்ணிமாவை மீட்டனர். தொடர்ந்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக, அந்த வழியே செல்லும் பல்வேறு ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன.