தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார்.
New Delhi: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது புகார் தெரிவித்த பெண் விசாரணையில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சம்பவம், பாலியல் புகார் சம்பவத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்து வருகிறார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பெண் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதினார். இந்த குற்றச்சாட்டை ரஞ்சன் கோகாய் மறுத்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க 2 பெண்கள் உள்பட 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது.
முன்னதாக இந்த குழுவில் நீதிபதி என்.வி. ரமணா இருந்தார். அவர் ரஞ்சன் கோகாயின் குடும்ப நண்பர் என்று சம்பந்தப்பட்ட பெண் புகார் தெரிவித்தார். இதையடுத்து ரமணா நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி மீது புகார் அளித்த பெண் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது-
நான் அளித்த புகாரை விசாரிக்க வெளியில் இருந்து விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுதான் அமைக்கப்பட்டது. இருப்பினும் நான் விசாரணைக்கு ஆஜர் ஆகினேன்.
விசாரணைக்குழு என்னை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. நீதிபதிகள் கேட்ட கேள்விகள் என்னை நடுங்கச் செய்தன. எனக்கு உதவி செய்ய எனது வழக்கறிஞர் கூட உடன் இல்லை.
விசாரணையின்போது அதனை ஆடியோ அல்லது வீடியோவாக பதிவு செய்ய எந்த வசதியும் செய்யப்படவில்லை. நான் வலியுறுத்தியும் நான் அளித்த வாக்கு மூலத்தின் காப்பி என்னிடம் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அந்தப் பெண் தனது அறிக்கையில் கூறியுள்ளார். விசாரணையில் இருந்து அவர் விலகியிருப்பது புதிய திருப்பத்தை இந்த விவகாரத்தில் ஏற்படுத்தி உள்ளது.