கடந்த ஜன.15ஆம் தேதி கனகதுர்கா தனது மாமியாரால் தாக்கப்பட்டார்.
Thiruvananthapuram: கடந்த ஜன.2ஆம் தேதி வெற்றிகரமாக சபரிமைலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்று தரிசனம் மேற்கொண்ட கனகதுர்காவை (39) இன்று அவரது மாமனார் மற்றும் மாமியார வீட்டை விட்டு விரட்டி அனுப்பியுள்ளனர்.
முன்னதாக கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்குள் கனகதுர்காவை அவரது மாமனார் மற்றும் மற்றும் மாமியார் வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கனகதுர்கா மாவட்ட பாதுகாப்பு அதிகாரியிடம், தனது மாமனார் மற்றும் மாமியார் தன்னை வீட்டை விட்டு வெளியே விரட்டி கதவை பூட்டியதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரானது நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலீசார் கனகதுர்கவை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, கனகதுர்காவின் கணவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு, தனது பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், கனகதுர்கா அரசு இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினார்கள்.
அவர்கள் இருவரும் கோயிலுக்குச் சென்று திரும்பியுடன் ஐயப்பன் கோயில் தந்திரி கோயில் நடையைச் சாத்தினார். பின்னர் பரிகாரப் பூஜைகள் செய்த பின் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலையில் இருந்து திரும்பினாலும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு மற்றும் வலது சாரி அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் ஆகியவற்றால், கடந்த இரு வாரங்களாக போலீஸார் பாதுகாப்பில் மறைவிடத்தில் கனகதுர்கா தங்கி இருந்தார்.
இதைத்தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பிலிருந்த கனகதுர்கா கடந்த வாரம் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த கனகதுர்காவின் மாமியாருக்கும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றது குறித்து கனகதுர்காவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி கனகதுர்காவை அவரின் மாமியார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் கனகதுர்காவுக்கு காயம் ஏற்பட்டு பெரிதலமன்னா தாலுக்கா மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின் மேல் கிசிச்சைக்காக மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கனகதுர்கா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று கனகதுர்கா மீண்டும் வீடு திரும்பிய போது, அவரது மாமனார் மற்றும் மாமியார வீட்டை விட்டு விரட்டி அனுப்பியுள்ளனர்.
முன்னதாக, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, இதுவரை 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.