New Delhi: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் அனைத்து காப்பகங்களையும் ஆய்வு செய்ய மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், குழந்தை கடத்தல் போன்ற குற்றங்கள் நடக்க வாய்ப்பிருக்கும் அமைப்புகள் மற்றும் குழந்தை மருத்துவமனைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது, அமைச்சகம்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறும் மாநில அரசுகளிடம் கூறப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியின் உத்தரவின் பேரில், மாநில அரசுகளுக்கு இந்த அறிவுறுத்தல் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
அரசு அல்லது தொண்டு அமைப்புகள் நடத்தும் குழந்தைகள் காப்பகங்கள் அனைத்தும், CARINGS என்ற இணையதளத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
CARINGS என்பது குழந்தைகளை தத்தெடுக்கும் சேவையைத் தரும் ஒரு செயலி. இது, CARA என்கிற மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தால் செயல்படுத்தப்படுகிறது.
விதிகளை மீறி, பணத்துக்காக குழந்தைகள் தத்துக் கொடுக்கப்படுவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ராஞ்சியில் மிஷனிர்ஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பில், விதிகளை மீறி குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்ட சர்ச்சையை சுட்டிக் காட்டி அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும், காப்பகங்கள் சட்ட விதிகளுக்கு உட்படுவதை கட்டாயப்படுத்தி அதற்கான வழிகாட்டலையும், செய்தித் தாள்களில் வெளியிட மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு அந்த அமைப்புகள் விதிகளை கடைபிடிக்காவிட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.