நானா படேகருக்கு ஆதரவு தெரிவித்து சரமாரியாக கருத்து தெரிவித்திருக்கிறார் பாஜக எம்.பி. உதித் ராஜ்.
New Delhi: பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். நானா படேகர் தனக்கு பலமுறை பாலியல் தொந்தரவு அளித்திருப்பதாக அவர் கூறியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக நானா படேகர் விளக்கம் அளிப்பதாக கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது பத்திரிகையாளர் சந்திப்பு நின்று போனது. இந்த நிலையில் நானா படேகருக்கு ஆதரவாக பாஜக எம்.பி. உதித் ராஜ் கருத்து தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ பாலியல் தொந்தரவுகளை பொதுவெளியில் தெரிவிக்கும் #MeToo போன்ற பிரசாரங்கள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், பாதிக்கப்பட்டதாக கூறும் ஒரு பெண், 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஏன் அதுபற்றி தெரிவிக்க வேண்டும். இது மிகவும் தவறான அணுகுமுறை. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்துவதன் மூலம் அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கலாம்.
வழக்கமாக 2 முதல் 4 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். ஓர் ஆணின் தன்மையை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பெண்கள் மட்டும் உத்தமர்களா? அவர்கள் ஏன் இந்த விவகாரத்தில் பொய் கூறியிருக்க கூடாது?. கடைசியில் ஒரு மனிதனின் நற்பெயர் களங்கம் செய்யப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.