This Article is From Mar 04, 2020

ஒருநாள் கலெக்டரான அரசுப் பள்ளி மாணவி!! வாய்ப்பளித்த ஆட்சியருக்கு குவியும் பாராட்டு!

அரசுப் பள்ளியில் தலைசிறந்து விளங்கும் மாணவிகளுக்கு ஒருநாள் கலெக்டர் வாய்ப்பு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சுமன் ராவத் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கலெக்டரான அரசுப் பள்ளி மாணவி!! வாய்ப்பளித்த ஆட்சியருக்கு குவியும் பாராட்டு!

புல்தானா மாவட்டத்தின் ஒருநாள் கலெக்டரான அரசுப் பள்ளி மாணவி பூனம் தேஷ்முக்.

ஹைலைட்ஸ்

  • மகளிர் தினத்தையொட்டி ஒருநாள் கலெக்டராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
  • அரசுப் பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவி பூனம் ஒருநாள் கலெக்டரானார்
  • இன்னும் சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்கிறார் மாவட்ட ஆட்சியர் சுமன்

மகளிர் தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவியை ஒருநாள் கலெக்டராக்கி மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தின் ஆட்சியரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுமன் ராவத் சந்திரா பெருமைப்படுத்தியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ம்தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக,பொருளாதார, கலாச்சார, அறிவியல், அரசியல் துறைகளில் சாதனை படைத்த பெண்கள், இந்த தினத்தன்று பெருமைப்படுத்தப்படுகின்றனர். முதலில் இந்த தினம் தொழிலாளர் அமைப்புகளால் வட அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. பின்னர் ஐரோப்பாவுக்கு சென்று தொடர்ந்து உலகம் முழுவதும் பரவியது.

சில நாடுகள் மகளிர் தினத்தையொட்டி விடுமுறை அளிக்கின்றன. சில இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு நடைபெறும்.

அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தின் ஆட்சியர் சுமன் ராவத் சந்திரா, அரசுப் பள்ளி மாணவி பூனம் தேஷ்முக் என்பவரை ஒருநாள் கலெக்டராக்கி பெருமைப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான தகவலை ஆட்சியர் ட்விட்டரில் பதிவிட, லைக்குகள் 2 ஆயிரத்தைக் கடந்துள்ளன. 

கலெக்டர் சுமன் ராவத்தின் செயலை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். இந்த வாரத்தில் இன்னும் சில மாணவிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

சுமன் ராவத் தனது ட்விட்டர் பதிவில், 'சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஒரு வாரத்திற்குத் தலைசிறந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் கலெக்டராகும் வாய்ப்பு அளிக்கப்படும். இந்த நாளின் கலெக்டர் அரசுப் பள்ளி மாணவி பூனம் தேஷ்முக்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமன் ராவத்தின் செயல், பல மாணவிகளுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கும் என்று கமென்ட் செய்துள்ளனர். 

புல்தானா மாவட்ட நிர்வாகமும் பூனம் தேஷ்முக்கின் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது.

ஒருநாள் கலெக்டர் பூனம், கடினமாக உழைப்பேன் என்றும், மற்ற மாணவிகளுக்கு முன்மாதிரியாக இருப்பேன் என்றும் உறுதி எடுத்துக் கொண்டதாக சுமன் ராவத் தெரிவித்துள்ளார். 

.