This Article is From Mar 08, 2019

சன்னி லியோன் படத்தில் ஒப்புகொண்டதற்காக 3 படம் கைவிட்டுப் போனது - ஆடை வடிவமைப்பாளர் தாட்ஷா

துணிச்சலும் தைரியமும் இருக்கும் இடத்தில் பாதுகாப்பும் இருக்கவே செய்யும் சினிமா உலகமும்  பெண்களுக்கான உலகம் தான். 

சன்னி லியோன் படத்தில் ஒப்புகொண்டதற்காக 3 படம் கைவிட்டுப் போனது - ஆடை வடிவமைப்பாளர் தாட்ஷா

தமிழ் சினிமா உலகம் ஆண்களை மட்டுமே அதிகம் கொண்டாடுகிற முதன்மைப்படுத்துகிற துறையாகவே உள்ளது. திரைக்கு முன்தெரிகிற கதாநாயகிகளுக்கு கிடைக்கும் அடையாளம் திரைக்கு பின்னால் இருக்கும் பெண்களுக்கு கிடைப்பதே இல்லை. ஆண்மையமாக திகழும் தமிழ்த் திரையுலகில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்துள்ள ஆடை வடிவமைப்பாளர் தாட்ஷாவிடம்கலந்துரையாடினோம்.

என்னுடைய சினிமா வேலையை தாத்தா சி.கே கண்ணன் இடமிருந்து 8 வயது முதலே தொடங்கிவிட்டேன். என் தாத்தா சி.கே.கண்ணன், நடிகர் என்.கே.டி.பாகவதர், என்.எஸ்.கே, சிவாஜி, எம்.ஜீ.ஆர், ரஜினி,கமல், பிரபு, கார்த்திக், சத்தியராஜ், விஜயகாந்த்உள்ளிட்ட பலருக்கும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்துள்ளார். மாமா என்.கே. ராமச்சந்திரனும் இந்தத் துறையிலேபணிபுரிந்துள்ளார்.

d0p1jo6o

காஸ்ட்டியூம் லைன் தான் எனக்கு பிடித்திருக்கான்னு தெரிந்து கொள்வதற்கு முன்பே ஸ்கூலை கட் அடிக்கவும், ஹோம் வொர்க்செய்யாமல் இருக்கவும் தன்னுடைய தாத்தா, மாமாவுடன் சுற்றத் தொடங்கிவிட்டேன். என்னுடைய முதல் படமாக டிஸ்யூம்படத்திற்கு முழுப் படத்திற்கும் காஸ்ட்யூம் டிசைனாராகஇருந்தேன். காஸ்ட்யூம் டிசைன் என்பது முழுபடத்திற்கும் பண்ணுவதுதான்பழைய வழக்கம், ஹீரோக்கு மட்டும் பண்றேன் ஹீரோயினுக்கு மட்டும் பண்றேன்னு செய்வதெல்லாம் இப்போது வந்துள்ள ட்ரெண்டு.

ஒரு இயக்குநர் தன்னுடைய திரைக்கதைக்கு எதை கேட்கிறாரோ அதைக் கொடுப்பது மட்டுமே சரியாக இருக்கும். என்னுடைய காஸ்ட்யூம் டிசைன் மட்டும் தனித்து தெரிய வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை. திரைக்கதை என்ன கேட்கிறதோ அதைக்கொடுத்தால் போதும் அதைவிட மிகையாக கொடுக்க வேண்டியதே இல்லை. பலரும் என் இசை தனித்து இருக்கனும், என்னுடையபாடல் வரி தனியா தெரியனும் என்று நினைக்கும் கான்செப்ட் தப்பு. திரைகக்தை கேட்டதைக் கொடுத்தால் போதும்.

 

a8504gqg

நான் ஒரு புரோடியூசர் டிசைனர் தான். என்னால் இயன்ற அளவிற்கு காஸ்ட்யூமில் செலவை குறைக்க முடியுமோ அதைத்தான் செய்வேன். சில ஹீரோக்கள் 20,000க்கு ஷூ கேட்பாங்க ஆனால் அது அந்த படத்திற்கு தேவையேயில்லாத செலவாக இருந்தால் ஹீரோவை கன்வீன்ஸ் செய்வேன். தேவையான விஷயங்களுக்கும் படத்தின் உண்மைத் தன்மைக்காக செய்ய வேண்டிய செலவுகளை செய்ய வேண்டும். அதற்கு அதீத ஆடம்பரம் தேவையில்லை.

சினிமா உலகில் பெண்களின் இடம் என்பது பெண்கள் எந்த அளவிற்கு போராடி இடத்தை பெறுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு இடம் இருக்கும். இன்றளவும் வெளியே லோகசனுக்கு போனால் பெண்கள் டாய்லெட்டுக்கு எங்கு போவார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காத துறையாகத்தான் உள்ளது.

எல்லா துறைகளைப் போலவே இங்கும் ஆண்கள் தான் அதிகம். இங்கும் நிறம், உடல்வாகு என எல்லாவற்றையும் குறித்துஅத்துமீறுகிற கேலிப் பேச்சுகளும், நக்கலும் இருக்கவே செய்கிறது. அதற்கெல்லாம் பயப்படாமல் அவர்களின் பேச்சுக்கு பதிலடியாக அவர்களையே பதிலுக்கு கேலி செய்து விட்டு போய்விட வேண்டும்.

இன்று மீடூ மூமெண்ட்டில் பேசிய யாருக்காவது வாய்ப்புகள் கிடைக்கிறதா என்று பார்த்தால் இல்லவே இல்லை என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. எல்லா பெண்களும் தனக்கு நேருகிற பாலியல் தொல்லைகளுக்கு ஒரே விதமான போராட்ட முறைதான் என்று எடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உங்களைப் பற்றி அவதூறு பேசும் ஆணிடம் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமும்இல்லை. அவதூறு பேசுபவனை ‘ஏன்டா பேசினோம்' என்று யோசிக்கும் அளவிற்கு அவனை அதே இடத்தில் நக்கலாக பேசிகலாய்த்து விட்டு வந்துவிடலாம்.

எந்த ஒரு பணியிடத்திலும் உரிமை குறித்து சட்டம் பேசினால் வேலைக்கு எடுக்க பயப்படுவார்களோ அது போல்தான் எனக்குவாய்ப்புகள் குறைகிறது. சமீபத்தில் சன்னிலியோன் படத்திற்கு வேலை பார்க்கப் போகிறேன் என்று என் ஃபேஸ்புக் பக்கத்தில்போட்டபின் ஒப்புக் கொண்ட 3 படங்களில் என்னை வேண்டாம் என்று பல காரணம் சொல்லி விலக்கி வைத்து விட்டனர்.

09h18vko

 

சன்னி லியோன் தன் வாழ்வின் கடந்த காலத்தை மறந்து வாழத்தொடங்கிவிட்டார், அவரை ரகசியமாக இரவில் வீடியோவில் ரசிப்பவர்கள் அவர்களைப் பற்றி கேலியும் அவர் படத்தில் வேலை செய்ய ஒப்புக் கொண்டதற்கும் என்னை விலக்குற புரிதலற்ற உலகம்தான் இது. சன்னி லியோன் மட்டுமல்ல சன்னி லியோன் மாதிரி எத்தனை பேர் வந்தாலும் அவர்களோடு வேலை செய்யத் தயார்.

பெண்கள் ஒரு இடத்தில் இருக்கும் சூழலுக்கு பயந்து அந்த இடத்தை விட்டு சென்று விட்டால் தோல்வி என்று பெண்களுக்குத்தான்.நான் விரும்பிய சினிமாவை விட்டு போகமாட்டேன். என்னைப் போன்று சினிமாவை விரும்பி வரும் பெண்களுக்கு இயன்ற உதவியையும் செய்கிறேன்.

லோகேசனிலிருந்து அவர்கள் பாதுகாப்பாக வீடு போய் சேர்ந்து விட்டார்களா எனப் பார்த்து வழியனுப்பி வைத்து விட்டு வருவேன் என்றார். துணிச்சலும் தைரியமும் இருக்கும் இடத்தில் பாதுகாப்பும் இருக்கவே செய்யும் சினிமா உலகமும் பெண்களுக்கான உலகம் தான்.

.