மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்தும் , மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. துவக்க வீராங்கனை யாட், கேப்டன் நைட் இருவரும் முறையே 43,25 ரன்கள் குவித்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இழக்கத்தில் ஆட்டமிழக்க 19.4 ஓவர்களில் இங்கிலாந்து 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் கார்ட்னர் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பறினார். ஸ்கட் மற்றும் வார்ஹாம் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணியில் ஃபீல்டிங்கும் அபாரமாக இருந்தது. இங்கிலாந்தின் சைவர் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் ஆஸ்திரேலிய வீராங்கனை பெர்ரி தனது 100வது டி20 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா. 15.1 ஓவரில் 106 ரன்கள் குவித்து சாம்பியன் பட்டம் வென்றது. பந்துவீச்சில் அசத்திய கார்ட்னர் பேட்டிங்கிலும் 26 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அவரே போட்டியின் ஆட்ட நாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் வீராங்கனையாக ஆஸ்திரேலிய கீப்பர் அலிஸா ஹீலி தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி நான்காவது முறையாக டி20 உலகக் கோப்பை வென்றுள்ளது. கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் லானிங் பேசுகையில் ''இந்தியாவுடனான தோல்வி தவிர, மற்ற அனைத்துமே எங்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக தான் அமைந்தது. ஒட்டுமொத்த அணியின் வெற்றி. நாங்கள் கோப்பையுடன் நாடு திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்