மகளிர் டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. டாஸில் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் குவித்தது. அந்த அணியின் 8 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஸ்கோரையே எட்டினர். நியூஸிலாந்து வீராங்கனை டெவைன் 3 ஓவர்கள் வீசி 4 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அயர்லாந்தை திணறடித்தார்.
பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணி 7.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெவைன் சிறப்பாக ஆடி 21 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். மேலும் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பாக 5.1 ஓவரில் 69 ரன்கள் குவிக்கப்பட்டது.
இந்த வெற்றி இரு அணிக்கும் அடுத்த சுற்று வாய்ப்புக்கு உதவாது எனினும் நியூஸிலாந்து புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது. அதேசமயம் அயர்லாந்து இந்த தொடரில் ஒரு வெற்றியும் பெறாமல் வெளியேறியுள்ளது. ஆட்ட நாயகியாக டெவைன் தேர்ந்தடுக்கப்பட்டார்.
இந்த பிரிவில் ஏற்கெனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நாளை நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான ஆட்டம் அரையிறுதி அட்டவணையை முடிவு செய்யும். இந்தியா இந்த ஒரு அணிகளில் ஒன்றை அரையிறுதியில் சந்திக்கும். இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணியாக இந்தியா உள்ளது.