பாஜகவில் சிந்தியாவுக்கு மரியாதை கிடைக்காது என்கிறார் ராகுல்.
New Delhi: காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவரும், நெருங்கிய நண்பருமான ஜோதிராதித்ய சிந்தியா விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சிந்தியா எதிர்காலத்தை எண்ணி அச்சப்பட்டு கொள்கைகளைக் கைவிட்டு விட்டார் என்று விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஜோதிராதித்யா சொன்னதற்கும், அவரது மனதில் உள்ளதற்கும் வித்தியாசங்கள் உண்டு. இப்போது நடப்பது கொள்கைகளுக்கு இடையிலான யுத்தம் என்பதில் தெளிவாக உள்ளோம். ஒருபக்கம் காங்கிரஸ். இன்னொரு பக்கம் பாஜக - ஆர்.எஸ்.எஸ். உள்ளது.
சிந்தியாவின் கொள்கை என்னவென்பது எனக்குத் தெரியும். அவர் என்னுடன் கல்லூரியில் படித்தார். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது அவருக்கு எதிர்கால அரசியல் குறித்து அச்சம் எழுந்துள்ளது. இதனால் தனது கொள்கைகளைச் சட்டைப் பைக்குள் போட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ். உடன் சென்று விட்டார்.
உண்மை என்னவென்றால் அங்கு அவருக்கு மரியாதையும் கிடைக்காது. அவரது மனமும் திருப்தி அடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராகுல், பிரியங்கா, சோனியா காந்திக்கு நெருக்கமான ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இதுபற்றி அவரது உறவினர் பிரத்யோத் மாணிக்ய தெப்பர்மா கூறுகையில், 'ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேச சிந்தியா முயன்று கொண்டிருந்தார். ஆனால் ராகுல் காந்தி சிந்தியாவைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை' என்றார்.
இதற்குப் பதிலடி கொடுத்திருந்த ராகுல் காந்தி, 'சிந்தியா எனது வீட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவர் காங்கிரஸ் கட்சியுடனான உறவை மட்டுமே முறித்துள்ளார்' என்று கூறினார்.
மத்தியப் பிரதேசத்தில் சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இதனால் அங்கு கமல்நாத் தலைமையிலான அரசு விரைவில் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்திருப்பது தேசிய அரசியலில் கடந்த சில நாட்களாகப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.