ஸ்டாலினுக்கு எதிர்வாதம் வைப்பது போல அன்புமணி, தர்மபுரியில் பிரசாரம் செய்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- ஸ்டாலின் தர்மபுரியில் தீவிர பிரசாரம் செய்தார்
- அதைத் தொடர்ந்து தொகுதி எம்.பி அன்புமணியும் பிரசாரம் செய்துள்ளார்
- அன்புமணிக்கு,முதல்வர் பழனிசாமி சில நாட்களுக்கு முன்னர் வாக்கு சேகரித்தார்
நாடாளுமன்றத் தேர்தல் தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலுடன் நடக்க உள்ளதால், கூடுதல் பரபரப்பு நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தர்மபுரி தொகுதியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை அவர் கடுமையாள சாடினார். இந்நிலையில் ஸ்டாலினுக்கு எதிர்வாதம் வைப்பது போல அன்புமணி, அதே தர்மபுரியில் பிரசாரம் செய்துள்ளார்.
பிரசாரக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, ‘அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி திமுக. கலைஞர் அவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி திமுக. இன்று தலைமைக்கு வந்திருப்பது மு.க.ஸ்டாலின். அவர் தமிழகத்தின், நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறாரா. இல்லை, என்னைத் திட்டுகிறார். எங்கள் தலைவர் ராமதாஸ் ஐயாவை திட்டுகிறார். திட்டிக் கொண்டே இருக்கிறார். திட்டங்கள் பற்றி அவர் ஒன்றும் பேசுவதில்லை.
நாங்கள் அவரை திரும்ப திட்டப் போவதில்லை. நான் அவரை பதிலுக்கு வசைபாட போவதில்லை. நான் தமிழகத்தின் வளர்ச்சி குறித்துப் பேசுவேன்' என்று பேசினார்.
முன்னதாக தர்மபுரியில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், ‘டாக்டர் அன்புமணி, எப்போதும் கவர்ச்சியாகவும் கம்பீரமாகவும் இருப்பார். ஆனால், இப்போது அவர் முகத்தைப் பாருங்கள். கம்பீரமும் இல்லை, கவர்ச்சியும் இல்லை, அந்த வேகமும் இல்லை, அந்தத் துடிப்பும் இல்லை. ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்று எல்லா இடத்திலேயும் போஸ்டர் அடித்து ஒட்டினார். ஆனால், இன்றைக்கு அவருடைய நிலை என்ன..?
டயர நக்குனுவங்க என்று சொன்னது யார். எடப்பாடியையும் ஒபிஎஸ்-யும் அன்புமணி, டயர் நக்கி என்று சொன்னார். டயர் நக்கி அருகில் நின்று ஓட்டுக் கேட்டுக் கொண்டு வருகிறீர்களே, வெட்கமாக இல்லையா?' என்று பேசினார்.