This Article is From Nov 07, 2019

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த அர்ஜூன் சம்பத் கைது!

சேதப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காவித்துணி அணிவித்து, ருத்ராட்ச மாலை அணிவித்து, திருநீறு, குங்குமம், சந்தனம் பொட்டு வைத்து, சூடம் ஏற்றி வழிபட்டார். 

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த அர்ஜூன் சம்பத் கைது!

பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்மநபர்கள் சிலர் சாணத்தையும், கருப்பு மையமும் பூசிவிட்டுச் சென்றனர்.


தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பதிவில், கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின், கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 

இந்த பதிவில், திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற படத்தையும் பாஜக வெளியிட்ட நிலையில் அதனை திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

இதுதொடர்பாக அவரது ட்வீட்டர் பதிவில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்! என கூறியிருந்தார். 

இதனிடையே, கடந்த நவ.4-ம் தேதியன்று தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்மநபர்கள் சிலர் சாணத்தையும், கருப்பு மையமும் பூசிவிட்டுச் சென்றனர்.

திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்த இந்தச்செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சேதப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காவித்துணி அணிவித்து, ருத்ராட்ச மாலை அணிவித்து, திருநீறு, குங்குமம், சந்தனம் பொட்டு வைத்து, சூடம் ஏற்றி வழிபட்டார். 

அர்ஜூன் சம்பத்தின் இந்த செயல் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது, தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டனங்களும் குவிந்தன. இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த விவகாரம் தொடர்பாக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அர்ஜூன் சம்பத்தை போலீசார் தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

.