வெளி மாநில இளைஞர்களை குறி வைத்து கைதுகள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன.
Ahmedabad: குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் 14 வயது குழந்தை ஒன்றை பீகாரை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. நிலைமை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, போலீசார் அதிரடி கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக 150-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள். சம்பவம் நடந்த சபர்கந்தா மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, குற்றத்தில் ஈடுபட்டவர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களை கண்டாலே குஜராத் மக்கள் அடி வெளுக்கத் தொடங்கி விடுகின்றனர். இதனால், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தலைமறைவாகி வருகிறார்கள்.
இதுகுறித்து மாநில போலீஸ் டிஜிபி சிவானந்த் ஜா கூறுகையில், ஹிம்மத் நகரில் நடந்த குழந்தை பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து, வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இது ஏற்க முடியாதது. நாங்கள் 150-பேருக்கும் அதிகமானோரை கைது செய்திருக்கிறோம். சோதனை நடவடிக்கை தொடர்கிறது என்றார்.
தொடர் கைது நடவடிக்கை, குஜராத் மக்களின் தாக்குதல் போன்றவை காரணமாக குஜராத்தில் பிழைப்புக்காக வந்துள்ள வெளி மாநில இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு தப்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.